இரண்டு ஆண்டுகளாக கோவிட் பெருந்தொற்றை பல கட்டுப்பாடுகளுடன் சமாளித்த மக்கள், சற்றே நிம்மதி பெருமூச்சுடன் தொடங்கிய இவ்வருடம் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் முடிய உள்ளது.
இந்த ஆண்டில் திரும்பி பார்க்க வைத்த உலக நிகழ்வுகள் சிலவற்றை இத்தொகுப்பில் காணலாம். பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா உக்ரைன் போர் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியது. 300 நாட்களுக்கும் மேல் தொடரும் இந்த போரின் தாக்கம் உலக முழுவதும் எதிரொலித்து வருகிறது.
ஏப்ரல் மாதத்தில், நம்பிக்கையில்லா தீர்மானம் மூலமாக பதவி பறிபோன முதல் பாகிஸ்தானிய பிரதமர் ஆனார் இம்ரான் கான். ஷெபாஸ் ஷெரிப் கான் அடுத்த பிரதமராக ஆட்சியை பிடிக்க, இந்த மாற்றம் சர்வதேச அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்த இலங்கையில், வெடித்த மக்கள் போராட்டங்களின் விளைவாக பிரதமர் மஹிந்த ராஜபக்சேவும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகினர்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ ஆபே பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போதே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
ஜூன் மாதம் ஐரோப்பாவில் வீசிய கடும் வெப்ப அலைகள் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து நாடுகளை பாதித்ததால் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
ஜூலை 15ஆம் தேதி, பழங்குடியினத்தை சேர்ந்த முதல் இந்திய ஜனாதிபதியாக பதவியேற்றார் திரௌபதி முர்மு.
ஆகஸ்ட் மாதம், நியூயார்க்கில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தீவிரவாதிகளால் கோரமாக தாக்கப்பட்டார். கருத்து சுதந்திரத்துக்கு எதிரான இச்செயல் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
உலகிலேயே அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த அரசியான ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் காலமானார். இதையடுத்து இளவரசர் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக பொறுப்பேற்று கொண்டார்.
சீன அதிபர் சி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராக பதவியேற்று கொண்டார். பரபரப்பான அரசியல் சூழலில், அக்டோபர் 25ஆம் தேதி இங்கிலாந்தின் முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரதமரானார் ரிஷி சுனக்.
அக்டோபர் மாதத்தில் ட்விட்டரை தன்வசப்படுத்திய எலான், அத்தளத்தில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வரத் தொடங்கினார். எலானின் ட்விட்டர் தொடர்பான நடவடிக்கைகள் உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியது.
ஹிஜாப் அணியாததற்காக 22 வயது மாசா அமினியின் கைது மற்றும் lockup மரணம் ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் இறங்க காரணமாக அமைந்தது. 26 வருடங்களுக்கு பிறகு அர்ஜென்டினா கால்பந்து அணி, டிசம்பர் 18ஆம் தேதி FIFA உலகக்கோப்பையை கைப்பற்றியது.
சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், உலக முழுவதும் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. நம்பிக்கையோடு தொடங்கிய வருடம் மீண்டும் பெருந்தொற்று சூழலை நோக்கி பயணிப்பது மக்களை பதட்டமடைய செய்து வருகிறதென்பதில் மாற்றுக்கருத்தில்லை.