பண்டைய காலந்தொட்டே பல விதங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் மஞ்சள் மூட்டுவலி, அஜீரணக் கோளாறு, சரும பிரச்சினைகள், சுவாச சிக்கல்கள், ஒவ்வாமைகள், கல்லீரல் நோய், மன அழுத்தம் உள்ளிட்ட பல உடல் உபாதைகளின் தீர்வுக்கு காரணமாக அமைந்து வருவது அனைவரும் அறிந்ததே.
அண்மையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள UC Davis Comprehensive Cancer Center மார்பக புற்றுநோய் தொடர்பான சிகிச்சையில் மஞ்சளை உபயோகிப்பது குறித்த ஆய்வை தொடங்க உள்ளது.
இந்த ஆய்வுக்காக Safeway Foundation 50,000 டாலர்களை வழங்கியுள்ளது. மார்பக புற்றுநோய் சிகிச்சையில் பரிந்துரைக்கப்படும் ஆன்டி ஈஸ்ட்ரோஜென் (Anti Estrogen) மருந்துகளின் பக்க விளைவாக நோயாளிகளுக்கு மூட்டுவலி மற்றும் உடல்வலி ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கிறது.
இந்த வலிகள் தீவிரமடையும் பட்சத்தில், நோயாளிகள் மருந்துகளை தவிர்க்க தொடங்குகின்றனர். இதனால், புற்றுநோய் பாதிப்பு மோசடையும் அபாயம் உண்டாகிறது. மஞ்சளில் இயற்கையாகவே மூட்டு வலியை மட்டுப்படுத்தும் தன்மை இருப்பதால், புற்றுநோய் பக்கவிளைவுகளை தடுக்கும் வலிநிவாரணியாக மஞ்சளை செயல்திறன் மிக்க மருந்தாக நடைமுறைக்கு கொண்டு வருவதே இந்த ஆய்வின் அடிப்படை நோக்கமாக உள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் சாதகமாக வரும் நிலையில், மார்பக புற்றுநோய் சிகிச்சையில் மஞ்சள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.