குளிர்காலம், திரும்ப வரும் கொரோனா பரவல் என்ற சூழலில் லேசான அறிகுறிகள் இருக்கும் போதே மருந்துகளை சாப்பிட்டு உடல்நிலையை சரி செய்து விட வேண்டும் என்ற முனைப்பு மக்களிடையே நிலவி வருகிறது.
ஆனால், அப்படி உட்கொள்ளும் மருந்துகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.
அண்மையில், தெற்கு மும்பை பகுதியை சேர்ந்த இரண்டரை வயது குழந்தைக்கு, இருமல் மருந்து குடித்த பிறகு ஏற்பட்ட சம்பவம் இவ்வகை மருந்துகளின் பாதுகாப்பு தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. மருந்து உட்கொண்ட பிறகு 20 நிமிடம் வரை குழந்தை மயக்க நிலைக்கு சென்றதோடு இதயத்துடிப்பு மற்றும் சுவாசத்தை உணர முடியவில்லை என குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் பாட்டியும் பிரபல வலி மேலாண்மை நிபுணருமான திலு மங்கேஷிகார் உடனடியாக CPR சிகிச்சை அளித்ததன் பிறகு குழந்தைக்கு மூச்சு திரும்பியுள்ளது. குழந்தையின் பெற்றோரும் மருத்துவர்களாக இருப்பதால், இருமல் மருந்தில் குளோர்பெனிராமைன் (Chlorpheniramine) மற்றும் டெக்ஸ்ட்ரோமெதார்ஃபன் (Dextromethorphan)ஆகிய 2 வேதிப் பொருட்களும் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம், அமெரிக்காவில் இந்த சேர்மானம் கொண்ட மருந்துகள் நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் போன்ற எச்சரிக்கை வாசகங்களோடு வரும் நிலையில், இந்தியாவில் சாதாரணமாக அது பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.
உள் உறுப்புகள் வரை தொற்று ஏற்பட்டு இருந்தால் மட்டுமே டெக்ஸ்ட்ரோமெதார்ஃபன் அடங்கிய மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி வழங்கலாமே தவிர, பொதுவாக தொண்டையில் உண்டாகும் தொற்றுக்கெல்லாம் இவ்வளவு வீரியம் கொண்ட மருந்துகள் தேவையற்றது என மருத்துவர்கள் எடுத்துரைக்கின்றனர்.
மேலும் இருமலுக்கான மருந்து உட்கொண்ட பின் ஒவ்வாமை அல்லது பக்க விளைவு காரணமாக இருமல் அதிகமாவது, மூச்சுவிட சிரமப்படுவது, வாய் வீங்குவது, முகம் மற்றும் உடல் சிவப்பாக மாறுவது, உடல் முழுவதும் தடிப்புகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது அவசியம் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.