கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கைகள் குறைந்து வரும்போது பல உலகநாடுகள் தளர்வுகளை அளித்தாலும், சீனா தொடர்ந்து Zero Covid Policy எனப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளை பொதுமக்களுக்கு விதித்து வந்தது.
நீடிக்கும் ஊரடங்களுக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் வலுத்து வந்த நிலையில், தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் சீனாவில் தீவிரமடைந்துள்ளது.
Sinovac மற்றும் Sinopharm போன்ற உள்நாட்டு தடுப்பூசிகளால் பெரிதளவு பயன் கிடைக்கவில்லை என்றும், அதிகப்படியான கட்டுப்பாடுகள், மக்களின் இயல்பான நோய் எதிர்ப்பு சக்தியையும் வெகுவாக குறைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரபல தொற்றுநோயியல் நிபுணர் எரிக், அடுத்த 90 நாட்களில் 60 சதவீத சீனர்களும் 10 சதவீத உலக மக்களும் கொரோனோவால் பாதிக்கப்படுவார்கள் எனவும் மில்லியன் கணக்கில் இறப்புகள் இருக்கும் என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், மருந்து கடைகளில் இருமல், சளி, காய்ச்சல் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு காணப்படுகிறது. இதையடுத்து மக்கள், இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளுக்கு திரும்பியுள்ளனர். இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது எலுமிச்சை.
ஒரே வாரத்தில் எலுமிச்சை வியாபாரம் 20இல் இருந்து முப்பது டன் வரை அதிகரித்துள்ளது மட்டுமில்லாமல் விலையும் மூன்று யுவான்கள் வரை உயர்ந்துள்ளது. எலுமிச்சை தவிர ஆரஞ் மற்றும் பேரிக்காய் பழங்களுக்கும் மவுசு கூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.