இறைச்சி உணவு சாப்பிடாத பலரின் உணவுத்தட்டுகளிலும் வித விதமாக சமைக்கப்பட்ட பன்னீர் இடம் பிடிக்க தவறுவதேயில்லை.
அதிலும், பாலக்கீரையுடன் பன்னீர் சேர்த்து சமைக்கப்படும் குருமா வகை அதன் சுண்டி இழுக்கும் சுவையால் சாப்பிடுபவர்களின் நாக்கை எளிதில் கட்டிப்போட்டு விடும் என்றே சொல்லலாம்.
ஆனால், இவ்வாறு பாலக்கீரையுடன் பன்னீரை சேர்த்து உண்பது சரியான தேர்வல்ல என்று இயற்கை மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இரும்புச்சத்து, பொட்டாசியம், புரதம், நார்ச்சத்து மற்றும் பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாலக்கீரையும் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த பன்னீரும் ஏன் தவறான சேர்க்கையாக மாறுகிறது என்ற குழப்பம் எழலாம்.
சிக்கல் என்னவென்றால் ஆரோக்கியம் மிகுந்ததாக கருதப்படும் இந்த பாலக்கீரை பன்னீர் உணவில், பாலக்கீரையில் உள்ள இரும்புச்சத்து உடலுக்கு கிடைப்பதை பன்னீரில் உள்ள கால்சியம் தடுக்கிறது.
அதே போல, இவ்வாறாக சாப்பிடும் போது பன்னீரில் உள்ள கால்சியமும் உடலுக்கு கிடைக்காமல் போவதால் உணவின் பயனே கேள்விக்குறியாகிறது.
சரியான உணவுகளை, அதனுடன் ஒத்துப்போகும் உணவுகளுடன் சேர்த்து உட்கொள்வதே உடலுக்கு பயன் அளிக்கும் என கூறும் மருத்துவர்கள் பாலுடன் வாழைப்பழம், மீனுடன் பால், தேனுடன் நெய் மற்றும் தயிருடன் cheese ஆகிய சேர்க்கைகளையும் தவிர்க்க அறிவுறுத்துகின்றனர்.