வழக்கத்திற்கு மாறாக அதிக குளிர் மற்றும் பனியை எதிர்கொண்டு வரும் சூழலில் அதீத குளிர் எப்படி உயிருக்கே ஆபத்தாக மாறும் என்பதை தெரிந்து கொள்வோம்.
வருடத்திற்கு ஐந்து மில்லியன் மக்கள் அதிகமான குளிர் அல்லது வெப்பத்தின் காரணமாக உயிரிழப்பதாக புள்ளிவிவர தரவுகளில் தெரியவந்துள்ளது.
உடல் இயல்பாக இயங்க, 36.5இல் இருந்து 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் தேவைப்படுகிறது. உடலின் வெப்பநிலை இதற்கு கீழாக குறையும் போது, நிலைமையை சமாளிக்க இரத்த குழாய்கள் சுருங்கி கொள்கிறது. ஆனால், அளவுக்கதிகமாக சுருங்கும் போது அதுவே இரத்த ஓட்டத்தை தடை செய்து உடல் முழுவதும் வலியை ஏற்படுத்துகிறது.
விரல்களில் தொடங்கும் இந்த வலி மூக்கு மற்றும் காதுகளை சென்றடைந்து பின் இதயம், மூளை, நுரையீரல் ஆகிய முக்கிய உறுப்புகளை செயலிழக்க செய்யும். உடலில் இரண்டு அல்லது மூன்று டிகிரி வெப்பம் குறைவது Hypothermia என அழைக்கப்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் அதிகமான நடுக்கத்திற்கு ஆளாவார்கள்.
32 டிகிரி அளவு குறைந்தவுடன் மூளையின் செயல்திறன் குறைவதால் நடுக்கமும் நின்று விடும். ஒரு கட்டத்தில் அதீத குளிர் உண்டாக்கிய வலி குறைந்து குழப்பமான மனநிலை, ஞாபக மறதி போன்ற அறிகுறிகள் மோசமாகி கோமா அல்லது மரணம் கூட ஏற்படலாம்.
Hypothermia மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்த கூடியதாக இருந்தாலும் சரியான நேரத்தில் மீட்டு உடலின் வெப்ப நிலையை மீட்டெடுத்தால் குளிரினால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.