Saturday, December 21, 2024

கேன்சரை வெளிப்படுத்தும் அறிகுறிகள்! கவனிக்காவிட்டால் கவலைக்கிடம்

அதிகமான அழுத்தம், நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, கணினியில் வேலை செய்வது என தசை பிடிப்பு, உடல்வலி, தலைவலி ஏற்படுவது இயல்பான ஒன்று என்றாலும் கூட, நாள்கணக்கில் இருக்கும் உடல்வலியை அலட்சியம் செய்யக்கூடாது.

வலி நிவாரணிகள் எடுத்துக்கொள்ளும் போது தற்காலிகமாக நிற்கும் வலி, மீண்டும் திரும்ப வந்தால் தகுந்த பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். வலியுடன் திடீரென குறையும் உடல் எடை, பசியின்மை, இருமல், சிறுநீரில் இரத்தம் போன்ற அறிகுறிகள் தீவிர பாதிப்பை உணர்த்துவதாக அமைகிறது.

இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படாத பகுதியில் வலி வந்தாலும் உடனே கவனிக்க வேண்டும்.

அடிக்கடி வரும் தலைவலி, மயக்கம் மற்றும் தலைசுற்றல் மூளை புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

வாயின் உள் வரும் கட்டிகள், குரல் இறுக்கமடைவது, தொண்டையில் இருந்து இரத்த வெளியேற்றம் ஆகியவை தொண்டை மற்றும் வாய் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம் என்பதால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

விடாத இருமல், தொடரும் மூச்சுத்திணறல், நெஞ்சு வலி மற்றும் இருமும் போது இரத்தம் வருவது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

நெஞ்சு மற்றும் அக்குள் பகுதிகளில் ஏற்படும் கட்டிகள்  மார்பக புற்றுநோய்கான அறிகுறிகள். உணவு விழுங்குவதில் சிரமம், திடீர் உடல் எடை குறைதல், நீடிக்கும் சோர்வு ஆகியவை உணவுக்குழாய் மற்றும் வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

அடி வயிற்று வலி, அதிகரிக்கும் அமிலத்தன்மை, ஈரல் மற்றும் மண்ணீரல் பெரிதாகுவது அவற்றில் புற்றுநோய் பாதித்ததனால் இருக்கலாம்.

மலம் கழிக்க சிரமப்படுதல், மலத்தில் இரத்தம் ஆகியவை பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆகும். சிறுநீர் கழிக்கும் போது இரத்தம் வருவது ப்ரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

அதிகமான சோர்வு, உடல் எடை குறைப்பு, ஹீமோகுளோபின் குறைபாடு ஆகியவை இரத்த புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

இது போன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகி நோய் பாதிப்புகளை கண்டறிந்து, சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதன் மூலம் நோயில் இருந்து விடுபடும் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும் என்பதே மருத்துவர்களின் கருத்து.

Latest news