பருவகாலம் மாறும்போது பெரியவர்களையே விட்டு வைக்காத சளி, காய்ச்சல் மற்றும் பல நோய் தொற்றுகள் குழந்தைகளை பாதித்தால் ஒரு வழியாக்கி விடும்.
குளிர்காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு சில முக்கிய நெறிமுறைகளை கடைபிடிப்பது அவசியம்.
உடலின் 30 சதவீத வெப்பம் தலை வழியாக வெளியே போய்விடும் என்பதால், குழந்தைகளின் தலை மற்றும் நெஞ்சுப்பகுதியை மூடியவாறு உடை அணிவிக்க வேண்டும். மேலும், கை கால்களை முழுமையாக மறைக்கும் உடைகள் உடலை கதகதப்பாக வைத்திருக்கும்.
குழந்தைகள் சாப்பிடும் முன், வெளியே சென்று வந்த பின் மற்றும் கழிவறையை பயன்படுத்திய பின் கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவுவதை உறுதி செய்ய வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு தாகம் எடுப்பது குறைவாக இருந்தாலும், நீரிழப்பை தடுக்க அவர்கள் தேவையான தண்ணீர் குடிக்கிறார்களா என கவனிக்க வேண்டும்.
குளிர்காலத்தில் உட்கொள்ளப்படும் அதிகமான சக்கரை அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தும் விதமாக அமைவதால், இனிப்பு உணவுகளை குறைத்து கொள்வது நல்லது.
உடலின் நோய் எதிர்ப்பு கட்டமைப்பு சிறப்பாக செயல்பட நிம்மதியான உறக்கம் அவசியம் என்பதால், இரவில் குழந்தைகளை நேரத்தோடு உறங்க வைப்பது அவர்களின் மேம்பட்ட ஆரோக்கியத்துக்கு காரணமாக அமையும் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.