பொன்னியின் செல்வன் படம் வெளியானதையடுத்து, படம் சொல்லும் கதை கற்பனையா அல்லது வரலாறா என பலருக்கும் கேள்வி எழுகிறது.
கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வனின் கதையை தழுவியே, மணி ரத்னத்தின் திரைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் பதிவாகி உள்ள சில உண்மை கதாபாத்திரங்களை மையமாக வைத்து, கற்பனை சூழல்கள் மற்றும் புனையப்பட்ட சுவாரஸ்ய நிகழ்வுகளை சேர்த்து வழங்குவதே வரலாற்றுப் புதினமாகும்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில் வரும் ஆழ்வார்க்கடியான், நந்தினி மற்றும் பூங்குழலி முழுவதும் கற்பனையான கதாபாத்திரங்கள். வந்தியத்தேவன் மற்றும் ஆதித்த கரிகாலன் வரலாற்றுப் படி வாழ்ந்த மனிதர்கள் என்றாலும் அவர்களை பற்றி கிடைக்கும் தரவுகள் மிகக் குறைவு. உண்மையில் சுந்தர சோழர் ஆட்சி காலத்திற்கு பின் வரும் தலைமுறையினரான சம்புவரையர்கள் கதையில், காலக்கோட்டில் முன்னிழுத்து வரப்படுகின்றனர்.
மேலும், நிஜத்தில் திருவண்ணாமலை பகுதியில் சிற்றரசர்களாக இருந்த சம்புவரையர்கள் கடம்பூரில் வசிப்பதாகவும் அவர்கள் மாளிகையில் கதையின் முக்கிய நிகழ்வுகள் அரங்கேறும் வண்ணம் கல்கி அமைத்துள்ள கதைக்களம் வரலாற்றுப் படி காலப்பிறழ்வாக பார்க்கப்படுகிறது.
பொன்னியின் செல்வனில் பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர் என இரண்டு கதாபாத்திரங்கள் வருகின்றனர். ஆனால், உண்மையில் சுந்தர சோழர் ஆட்சி செய்த 17 ஆண்டுகளில் பழுவூரை ஆட்சி செய்த பழுவேட்டரையர் மறவன் கன்டன் என்ற சிற்றரசர் ஆட்சி செய்ததாகவும் அவருக்கு தம்பி யாரும் இல்லை என கூறப்படுகிறது. இவர் உத்தம சோழன் காலம் வரை வாழ்ந்ததற்கு கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில், பொன்னியின் செல்வன் கதையில் பெரிய பழுவேட்டரையர் இறந்ததும் சின்ன பழுவேட்டரையர் பொறுப்பேற்பது போல கதை நகர்கிறது.
இவ்வாறாக, 1950இல் இருந்து 1954 வரை வாராந்திர பத்திரிகையாக வெளிவந்த கல்கியில் தொடராக வந்த பொன்னியின் செல்வன் கதையில், வரலாறு எனும் கடிவாளத்துடன் தன் கற்பனை குதிரையை ஓட விட்டிருப்பார் கல்கி. அது குறித்து அவரே
‘பொதுவாக நாவல்கள் எழுதுவதற்கும் முக்கியமாகச் சரித்திர நவீனங்கள் எழுதுவதற்கும் சட்டதிட்டங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. அப்படி ஏற்பட்டிருந்தால் அவற்றை நான் படித்ததில்லை. ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தமக்குரிய முறையை வகுத்துக்கொண்டு எழுதுகிறார்கள்’
என பொன்னியின் செல்வன் தொடரின் முடிவுரையில் குறிப்பிட்டிருப்பார்.
அப்போது தான் இந்தியாவில் சுதந்திரம் கிடைத்த சூழலில், தன் நாட்டு அரசர்களை பற்றிய கதை மக்களின் மனதில் வரலாறாகவே பதிந்தது. அதனாலேயே, இன்றைக்கும் தமிழகத்தில் விற்பனையில் முதலிடம் பிடிக்கும் நாவலாக திகழ்கிறது பொன்னியின் செல்வன்.
இப்படி காலபிறழ்வுகளும் சுவையூட்டல்களும் நிறைந்த பொன்னியின் செல்வனை வரலாற்று சுவடுகளுடன் கூடிய மிகைப்படுத்தப்பட்ட காவியமாக மட்டுமே பார்க்க முடியும் என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.