தலைமுடி கொட்டுவது, வழுக்கை விழுவது போன்ற பிரச்சினைகளுக்கு மரபணு, தலைமுடியை சரிவர பராமரிக்காதது, மன அழுத்தம், உடல் உபாதைகள், மருந்துகளின் பக்க விளைவுகள் என காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
அதிலும், வழுக்கை விழுந்துவிட்டால் பலருக்கும் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு தன்னம்பிக்கையை இழக்கும் சூழல் உருவாகிறது. அண்மை ஆராய்ச்சிகளில், வழுக்கையால் வேதனைப்படுபவர்களுக்கு நல்ல செய்தி அருகில் வந்துள்ளது உறுதியாகியுள்ளது.
மினாக்சிடில் (Minoxidil) என்ற மருந்து 1992ஆம் ஆண்டில் இருந்தே முடி வளர்ச்சிக்காக வெளிப்புறமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதே மருந்து, அதிக இரத்த அழுத்தத்தை குறைக்க உட்கொள்ளப்படவும் செய்யப்பட்டுள்ளது.
வெளிப்புறமாக உபயோகிப்பதை விட, உள்ளுக்குள் எடுக்கும் போது முடி வளர்ச்சி அதிகரிப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். எனினும், தலையில் மட்டும் இல்லாமல் உடல் முழுவதும் முடி வளர துவங்கியதால், இந்த மருந்து அடுத்த கட்ட ஆராய்ச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதன்பின், பயன்பாட்டுக்கு வந்த Minoxidil lotion வழுக்கை சிக்கல் உள்ளவர்களுக்கு, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. குறைவான மில்லிகிராம் அளவில் மாத்திரையாகவும் கிடைக்கும் மினாக்சிடிலின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை முழுமையான ஆராய்ச்சிக்கு உட்படுத்தினால், வழுக்கை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பது சாத்தியமாகும் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.