ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திர தினம், நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஆனால், இந்த நாள் சுதந்திர தினமாக ஏன் கொண்டாடப்படுகிறது, இந்த நாளை தேர்வு செய்தது யார் என யோசித்ததுண்டா? இந்த கேள்விக்கு விடை காண வரலாற்றில் சற்றே பின்னோக்கி பயணிப்போம்.
1929ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ் எடுத்த தீர்மானத்தின்படி டிசம்பர் 29ஆம் தேதி லாகூரில் உள்ள ரவி ஆற்றின் அருகே முதல் முறையாக இந்தியக் கொடியை ஏற்றினார் ஜவஹர்லால் நேரு.
அந்த வருடம் Lord Irwin அடங்கிய குழுவிடம் இந்திய பிரதிநிதிகள் பூர்ண ஸ்வராஜ் என்ற முழுமையான சுதந்திரம் வேண்டி வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும், 1930ஆம் ஆண்டில் இருந்து ஜனவரி 26ஆம் தேதியை சுதந்திர போராட்ட வீரர்கள், சுதந்திர தினமாக கொண்டாடி வந்தனர்.
போராட்டங்கள் ஒரு புறம் வலுத்து வந்த நிலையில், ஜூலை 1947ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி இந்திய சுதந்திர மசோதா, இங்கிலாந்து மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா பரிசீலிக்கப்பட்ட பின் இந்தியாவிற்கு 1948ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி சுதந்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டது.
இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் ஆக இருந்த Lord Mountbatten, விரைவாக சுதந்திரம் வழங்கப்பட்டால் மட்டுமே கலவரங்களையும் உயிர்சேதத்தையும் தவிர்க்க முடியும் என வலியுறுத்தியதால், அந்த வருடமே இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க இங்கிலாந்து அரசு முடிவு செய்தது.
இதையடுத்து, இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதியை இந்தியாவிற்கான சுதந்திர தினமாக தேர்வு செய்ததாக Lord Mountbatten பகிர்ந்துள்ளார்.
முதல் சுதந்திர தினத்தை பாகிஸ்தானும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்றே கொண்டாடியது. பின்னர், ஆகஸ்ட் 14 அன்றே அதிகாரம் கைமாறியதாக பொருள் கொள்ளும் வகையில், பாகிஸ்தான் அன்றைய தினத்தை தனது சுதந்திர தினமாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.