பிரியாணியுடன் நகையை விழுங்கிய இளைஞரைக் கைதுசெய்து நகையைக் காவல்துறை
மீட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
விலை உயர்ந்த பொருட்களைத் திருடுவதற்குத் திருடர்கள் பயன்படுத்தும் விநோதமான
தந்திரங்கள், முறைகளை நாளிதழ்களில் படித்திருக்கிறோம். தொலைக்காட்சி வாயிலாகவும்
கேள்விப்பட்டிருக்கிறோம். இருந்தாலும், அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில்,
பிரியாணியுடன் சேர்த்து நகையை விழுங்கிய திருடனைக் கைதுசெய்து ஆபரணத்தை
மீட்டுள்ளனர் காவல்துறையினர்.
கடந்த மே மாதம் 3 ஆம் தேதி சென்னையில் ஒருவரின் வீட்டில் ரம்ஜான் விருந்து நடைபெற்றது.
விருந்து முடிந்தபோது வீட்டிலிருந்த வைர நெக்லஸ், வைரப் பதக்கம், தங்கச் செயின் உள்ளிட்ட
1 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனதை வீட்டிலுள்ளவர்கள் கவனித்தனர்.
இதனால் பதறிப்போன நகையை இழந்த பெண், உடனடியாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில்
புகார் அளித்தார். அவர்கள், விருந்து நடந்த வீட்டிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து,
சந்தேகத்தின் அடிப்படையில் விருந்தில் கலந்துகொண்ட 32 வயது இளைஞர்..ஒருவரைக் கைது
செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் குடிபோதையில் நகை திருடியதை ஒப்புக்கொண்டார்.
பின்னர், அந்தத் திருடனை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்று அவரது வயிற்றைக்
ஸ்கேன் செய்தபோது நகைகள் இருப்பதைக் கண்டனர். அதைத் தொடர்ந்து அவருக்கு எனிமா
கொடுத்து நகைகள் மீட்கப்பட்டது.
நகைகள் மீட்கப்பட்டுவிட்டதால், அந்தப் பெண் தனது புகாரைத் திரும்பப் பெற்றார். இதனால்,
நகையைத் திருடியவன் மற்றும் புகார் தாரரின் பெயர் உள்ளிட்ட விவரங்களைக் காவல்துறை
வெளியிடவில்லை.