Friday, December 27, 2024

திருட்டுப்போன 60 அடி இரும்புப் பாலம்

60 அடி இரும்புப் பாலம் திருட்டுப்போன சம்பவம்
அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

சினிமாவில் வடிவேலுவின் கிணற்றைக் காணோம்
நகைச்சுவைக் காட்சிபோல் நிஜத்தில் இரும்புப் பாலம்
காணாமல் போயுள்ள அதிர்ச்சி சம்பவம் அண்மையில்
பீகாரில் நிகழ்ந்துள்ளது.

திருடர்கள் மிகத் தந்திரமாக செயல்பட்டுத் தங்களை
அரசு அதிகாரிகளாகக் காட்டிக்கொண்டு உள்ளூர்
அரசு அதிகாரிகளின் உதவியுடன் பட்டப் பகலில்
இந்தத் திருட்டை அரங்கேற்றியுள்ளதுதான் அதிர்ச்சியின்
உச்சம்.

பீகார் மாநிலத்தில்தான் இந்த விநோதமான சம்பவம்
நிகழ்ந்துள்ளது.

அங்குள்ள ரோஹ்தாஸ் மாவட்டம், பிக்ரம்கஞ்ச் பகுதியில்
பாழடைந்த மற்றும் கைவிடப்பட்ட கால்வாய்ப் பாலம்
ஒன்று இருந்தது. 1972 ஆம் ஆண்டு அமையாவர் பகுதியில்
ஆரா என்ற கால்வாயின்மீது 60 அடி நீளம், 12 அடி உயரத்தில்
இந்த இரும்புப் பாலம் கட்டப்பட்டது.

பாலம் கட்டப்பட்டு சுமார் 50 ஆண்டுகள் ஆகிவிட்டதால்,
இந்தப் பாலத்தைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டனர்.

இந்த நிலையில்தான் திருடர்களின் மூளை வித்தியாசமாக
சிந்தித்துள்ளது.

அவர்கள் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள்போல் வேடமிட்டனர்.
ஜேசிபி, பிக் அப் வேன், கியாஸ் கட்டர், வாகனங்களுடன் வந்த
திருடர்கள் உள்ளூர் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளின் உதவியுடன்
மூன்றே நாட்களில் முழுப்பாலத்தையும் கழற்றித் துண்டித்துவிட்டுத்
தலைமறைவாகி விட்டனர்.

பின்னர்தான் பாலத்தைக் கழற்றிச்சென்றது திருடர்கள் என்பது
அரசு அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. உடனடியாகப் பாலம்
திருடப்பட்டது குறித்து போலீசில் புகார் அளித்தனர். காவல்
துறையினரும் துரிதமாக செயல்பட்டுக் களவாணிகளைக்
கைதுசெய்துவிட்டனர்.

Latest news