Sunday, December 22, 2024

குப்பைச் சீட்டுக்கு ஏழரை கோடி பரிசு

சுரண்டல் லாட்டரிச் சீட்டு மோகம் நம் நாட்டில் மட்டுமல்ல,
வளர்ந்த நாடான அமெரிக்காவிலும் அதிகமாகவே உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் மான்சூசெட்
பகுதியில் குடும்பத்தோடு லாட்டரிச் சீட்டு விற்பனை
செய்துவருகிறார் அபிஷா. இந்திய வம்சாவளியைச்
சேர்ந்தவர் இவர்.

இவர் கடைக்கு வாடிக்கையாக வருபவர் லீரோஸ்
ஃபீகா. சுரண்டல் லாட்டரிமீது பீகாவுக்குக் கொள்ளைப்
பிரியம்போலும். அபிஷாவின் கடைக்கு வரும்
போதெல்லாம் ஆசைஆசையாய் சுரண்டல்
லாட்டரி வாங்குவார்.

பரிசு விழுந்துவிடாதா, கோடீஸ்வரியாகிவிட
மாட்டோமா என்னும் பேராவலில் ஒவ்வொரு
முறையும் லாட்டரி வாங்கியதும் கடையில்
வைத்தே சுரண்டுவார்.

ச்சே…எனக்கு அதிர்ஷ்டமே இல்லன்னு வெறுத்துப்
போய் கடையிலிருந்து விறுட்டென சென்றுவிடுவார்.

அப்படித்தான் கடந்த முறையும் சலிப்புடன் வாங்கி
சுரண்டிப் பார்த்தார். அவசரக் கோலத்தில் பார்த்து
விட்டு பரிசு விழவில்லையென்று கருதி, சுரண்டிய
சீட்டைக் கடைக்காரப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு,
”எனக்கு பசிக்குது. நான் கௌம்புறேன்”னு வேகம்
வேகமாகக் சென்றுவிட்டார்.

கடைக்காரப் பெண்ணான அபிஷாவும் அதை வாங்கி
கடையின் மூலையிலுள்ள குப்பைகளோடு குப்பைகளாக
வீசியெறிந்துவிட்டார்.

சாயங்காலம் ஆனது. குப்பைகளைக் கூட்டி வெளியே
கொட்ட முயன்றார். அவரது கண்களில் பளிச்சென்று
ஒரு பரிசுச் சீட்டு பட்டது. எடுத்துப் பார்த்தார். அவரது
கண்கள் விரிந்தன.

குப்பையிலிருந்து எடுத்த அந்தப் பரிசுச் சீட்டுக்கு
ஒரு மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ஏழரை
கோடி ரூபாய்) பரிசு கிடைத்திருந்ததை அறிந்தார்.

உடனே ஃபீகாவை அவரின் அலுவலகத்துக்குச்
சென்று பார்த்து விஷயத்தைச் அபிஷயா சொன்ன
போது நம்பவேயில்லை. பரிசு கிடைத்திருப்பது
உண்மைதான் என்று சொன்னதும் ஆனந்தக்
கண்ணீர் பொங்கி வழிய அபிஷாவைக் கட்டி
அணைத்துக்கொண்டார் ஃபீகா. உடனே பரிசுச்
சீட்டை அவரிடம் ஒப்படைத்தார் அபிஷா.

அதைப் பெற்றுக்கொண்ட ஃபீகா, ”இப்படியும்
ஒரு நேர்மையான மனிதரா?” என்று வியப்பில்
ஆழ்ந்தார்.

ஆனால், பரிசு பெற்றவரைவிட இப்போது அமெரிக்காவில்
பிரபலமாகிவிட்டார் அபிஷா. இந்திய வம்சாவளியினரான
அபிஷாவுக்கு அமெரிக்காவே பாராட்டு மழை பொழிந்தது.

உரியவரிடம் பரிசுச் சீட்டை ஒப்படைத்ததிலும் அமெரிக்கப்
பாராட்டு மழையிலும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள்
அபிஷாவும் அவரது அம்மா அருணா ஷா குடும்பத்தினரும்.

Latest news