Wednesday, January 15, 2025

பெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய 12 விஷயங்கள்

நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகிறோம்.
சடங்கான பெண்ணை அடிக்காதீர் என்று கூறுவார்கள். அம்மாவுடன் கூட்டணி
அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால், அவர்கள் வாழ்வில் என்ன
நடக்கிறதென்றே அப்பாவுக்குத் தெரியாமலே போய்விடுகிறது.

பெண் குழந்தைகளுக்கு தந்தை சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் உள்ளன.

  1. வயதுக்கு வந்த பெண்ணுடன் தந்தை செலவிடும் நேரம் குறைவு.
    ஆங்கிலத்தில் குவாலிட்டி டைம் என்று சொல்வார்கள். அதைப்போல,
    முக்கியமான விஷயங்களை மகள்களிடம் கேட்டறிய வேண்டும். அவர்கள்
    தந்தையுடன் பேசும்போது நிறைய விஷயங்கள் தெரியவரும்.
  2. மகளின் நட்பு வட்டத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்ள
    வேண்டியது தந்தையின் கடமையாகும். நட்பு வட்டத்தில் என்ன
    நடக்கிறதென்று தினமும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். யார் நல்ல
    தோழி என்பதை இதன்மூலம் தந்தை அறிந்துகொள்ள முடியும்.
  3. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லுங்கள். கல்வியில்
    சந்தேகத்தைக் கேட்டு விளக்கம் சொல்லுங்கள்.
  4. ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும்
    பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை அடையாளம் காண்பது
    எப்படியென எடுத்துக் கூறுங்கள்.
  5. வாழ்க்கையைப் பற்றி மகள்களுடன் பேசுங்கள். வாழ்க்கையில்
    என்னவாக விரும்புகிறாள் என்பதைக் கேளுங்கள். உரிய அறிவுரையுடன்
    அவளுக்கு நீங்கள் எப்படி உதவுவது எனத் திட்டமிடுங்கள்.
  6. கடை, ஷாப்பிங் போன்றவற்றுக்குச் செல்லும்போது அழைத்துச் செல்லுங்கள்.
    பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்துகொள்கிறார்கள், ஆண்கள் எப்படி
    நடந்துகொள்கிறார்கள் என்பதை நேரில் பார்த்து அறிந்துகொள்ளட்டும். பொது
    இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரிகம், உடையணியும் முறை போன்றவற்றை
    சொல்லித் தாருங்கள்.
  7. நீங்கள் எவ்வளவு தூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவர் உங்களுக்கு
    எந்தளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு
    தன்னம்பிக்கையும், மன உறுதியையும் கொடுக்கும்.
  8. உங்களின் குடும்ப வரலாற்றைப் பற்றி மகள்களிடம் விவரித்துச் சொல்லுங்கள்.
    முன்னோர்களின் பெருமைகளை உங்கள் மகள்கள் தெரிந்துகொள்ளட்டும்.
    உங்களைப் பற்றியும் சிறிது சொல்லுங்கள் எங்கு படித்தீர்கள், எப்படிப் படித்தீர்கள்,
    உங்கள் பொழுதுபோக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு உயர்ந்தீர்கள், உங்கள்
    குடும்பம், அடையவேண்டிய இலக்கு போன்றவற்றை மகள்களிடம் தெளிவாகச்
    சொல்லுங்கள்.
  9. புத்தகங்கள் படிக்கும் வழக்கத்தை இளம்வயதிலேயே ஏற்படுத்துங்கள். வீட்டில்
    புத்தகங்களை சேர்த்து சிறு நூலகம் உருவாக்குங்கள். வெளிநூலகங்களிலிருந்தும்
    நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள்.
  10. உடலளவிலும், மனதளவிலும் பலசாலியாக உங்கள் மகளை உருவாக்குங்கள்.
    வெளியுலகில் எந்த மாதிரியான பிரச்சினைகள் வரும், அதை எப்படி சமாளிப்பது
    என்பதை சொல்லிக்கொடுங்கள். தற்காப்புக் கலைகளையும் கற்றுக்கொடுங்கள்.
  11. இன்றைய காலகட்டத்தில் எல்லா விஷயங்களுக்கும் அடுத்தவர் கையை
    எதிர்பார்க்க முடியாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது மாதிரியான சிறுசிறு
    வேலைகளைக் கற்றுக்கொடுங்கள்.
  12. இவை எல்லாவற்றையும்விட நீங்கள் உதாரணமான வாழ்க்கை வாழுங்கள்.
    உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள்
    மனைவி உங்களை எப்படி நடத்துகிறாரோ அப்படித்தான் உங்கள் மகளும் தன்
    கணவனிடம் செயல்படுத்துவாள். தந்தைதான் மகள்களுக்கு முதல் குரு. தந்தையைப்போல்
    ஒரு சிறந்த நண்பன் மகள்களுக்கு வேறு யாரும் கிடையாது.
    தந்தையின் அறிவு, அனுபவம், திறமை, வழிகாட்டுதல்,
    அக்கறை வேறெங்கும் மகள்களுக்கு கிடைக்காது. தந்தையே
    தன் மகள்களை சிறந்தவராக உருவாக்க முடியும்.
Latest news