Face Book உதவியால் 58 ஆண்டுக்குப் பிறகு தந்தையைக் கண்டுபிடித்த மகள்

285
family
Advertisement

58 ஆண்டுகளுக்குமுன்பு காணாமல்போன தந்தையை முக நூல் உதவியால் 59 வயது மகள் கண்டுபிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷையர் பகுதியில் வசித்து வருபவர் ஜுலி லண்ட். 58 வயதான இவர் தனது முக நூல் பக்கத்தில் 1963 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளைப் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டார்.

புகைப்படத்துக்குக் கீழே இந்தப் புகைப்படத்திலுள்ள குடும்பத்தை யாராவது அடையாளம் காண்கிறீர்களா? எனது தந்தை பெயர் பிரைய்ன் ரோத்தரி. 80 வயது இருக்கலாம். இதுபற்றி யாராவது தகவல் தந்தால் மிக்க நன்றியுடையவளாக இருப்பேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதைப் பார்த்த பலர் ஜுலியைத் தொடர்புகொண்டனர். அதனால் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார் அவர். உடனே, ஜுலி எனது தந்தையைக் கண்டுபிடிக்க உதவிசெய்யுங்களேன் என வேண்டுகோள் வைத்தார். அதற்கும் மகிழ்ச்சியான பதில் கிடைத்தது.

ஜுலி குழந்தையாக இருந்தபோது வாரம் ஒருமுறை அவளது தந்தை பார்த்துவிட்டுச் சென்றதாகப் பதிவிட்டனர். அந்தப் பதிவைப் பார்த்து மேலும் உற்சாகமானார் ஜுலி. அதைத் தொடர்ந்து ஜுலியின் தந்தை வசிக்கும் இடம் தெரியவந்தது.

தான் வசிக்கும் இடத்திலிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் தனது தந்தை வசிக்கும் தகவல் ஜுலியை உற்சாகமடையச் செய்தது. உடனே கிளம்பி தந்தையைப் பார்க்கச் சென்றுவிட்டார். தந்தையைப் பார்த்தபிறகுதான் ஜுலிக்கு நிம்மதி வந்துள்ளது.

ஃபேஸ்புக் குழு இல்லாவிட்டால் இந்த அதிசயம் நடந்திருக்காது. நான் பல ஆண்டுகளாக என் தந்தையைக் கண்டுபிடிக்க விரும்பினேன். ஆனால், எந்த விவரமும் இல்லாததால் அது நடக்காமல் போயிற்று.

இந்த ஆண்டு என் அம்மாவையும் வளர்ப்புத் தந்தையையும் இழந்துவிட்டேன். இந்த இக்கட்டான நிலையில் என்னைப் பெற்ற தந்தையையும், சித்தியையும் பெற்றுள்ளேன். இதை என்னால் நம்பவே முடியவில்லை. அதுவும் நான் இருக்குமிடத்திலிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் என் தந்தை வசித்துவருகிறார் என்பதை நேரில் காணும்போது ஆனந்தமாக உள்ளது என உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விடுகிறார் ஜுலி.

சமூக ஊடகங்களை அநேகம்பேர் வெறும் பொழுதுபோக்காகப் பயன்படுத்தி வரும் நிலையில், இதுபோன்ற உறவுகளை இணைக்கவும் சிலர் அவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.