அமெரிக்காவில் அரசு முடக்கம் பல நாளாகத் தொடரும் நிலையில், அங்குள்ள ஏழரை லட்சம் அரசு ஊழியர்கள், அரசியல் பனிப்போரின் பணயக் கைதிகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். சம்பளம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் அந்த ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக, இப்போது, அதிபர் டிரம்ப் ஒரு புதிய குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.
செய்தியாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “அரசு முடக்கம் முடிந்து, வேலைக்குத் திரும்பும் எல்லா ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்று அதிரடியாகக் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல, “யாருக்கு சம்பளம் கொடுக்கணும், யாருக்குக் கொடுக்கக் கூடாதுன்னு நான் தான் முடிவு செய்வேன். சில ஊழியர்கள் சம்பளம் வாங்குவதற்குத் தகுதியானவர்கள் இல்லை” என்றும் அவர் கூறியிருப்பது, அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆனா, இங்கதான் ஒரு மிகப்பெரிய விஷயம் இருக்கு.
2019-ஆம் ஆண்டு, இதே போன்ற ஒரு அரசு முடக்கம் ஏற்பட்டபோது, “அரசு முடக்கம் முடிஞ்சதும், பாதிக்கப்பட்ட எல்லா ஊழியர்களுக்கும் முழு சம்பளத்தையும் கொடுக்கணும்”னு ஒரு சட்டத்துல, இதே டிரம்ப் தான் கையெழுத்துப் போட்டார்!
அப்படி என்றால், இப்போது ஏன் இப்படி மாற்றிப் பேசுகிறார்?
இதற்கு வெள்ளை மாளிகை ஒரு புதுக் காரணத்தைச் சொல்கிறது. அந்த பழைய சட்டம் திருத்தப்பட்டுவிட்டது என்றும், இனிமேல் சம்பளம் கொடுக்க வேண்டும் என்றால், நாடாளுமன்றம் புதிதாக ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஒரு புதிய குறிப்பாணையைத் தயாரித்துள்ளது. இது, ஜனநாயகக் கட்சியினருக்கு அழுத்தம் கொடுப்பதற்காக டிரம்ப் போடும் ஒரு புதிய திட்டம் என்று பார்க்கப்படுகிறது.
இந்த அரசியல் சண்டையால், ஏழரை லட்சம் அரசு ஊழியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. சம்பளம் வருமா, வராதான்னு தெரியாம, ஒருவிதமான மன உளைச்சலில் அவர்கள் இருக்கிறார்கள்.
இந்த எல்லாப் பிரச்சனைக்கும் காரணம், சுகாதாரப் பாதுகாப்பு நிதிதான். இது தொடர்பான மசோதாவை நிறைவேற்றுவதில் ஆளும் குடியரசுக் கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடிப்பதால், அமெரிக்காவின் நிர்வாகமே ஸ்தம்பித்துப் போயுள்ளது.
அரசியல் சதுரங்கத்தில், அப்பாவி ஊழியர்கள் பகடைக் காய்களாக உருட்டப்படுவதுதான் இங்கு வேதனையான விஷயம்.