Saturday, December 27, 2025

தீபாவளிக்கு கூடுதலாக 5 சிறப்பு ரயில்கள் : எந்தெந்த ரூட்?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே 5 புதிய சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. விழா காலங்களில் டிக்கெட் பெற முடியாமல் காத்திருக்கும் பயணிகளை கருத்தில் கொண்டு, தாம்பரம், எழும்பூர், செங்கோட்டை மற்றும் மதுரை ஆகிய இடங்களிலிருந்து 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தாம்பரம்-செங்கோட்டை இடையே தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து அக்.17 அன்று இரவு 7.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு செங்கோட்டைக்கு சென்றடையும். செங்கோட்டையில் இருந்து அக்.20 (தீபாவளி நாள்) இரவு 8.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06014) அடுத்த நாள் காலை 9.45 மணிக்கு தாம்பரத்தை வருகை தரும்.

இந்த ரயிலில் 1 ஏ.சி. பெட்டி, 11 இருக்கை பெட்டி, 4 பொதுப் பெட்டி மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பெட்டி ஆகிய மொத்தம் 18 பெட்டிகள் உள்ளன. முன்பதிவு அக்.16 மாலை 4 மணிக்கு தொடங்கியது.

சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கான முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயிலும் இயக்கப்படும். அக்.17 இரவு 11.45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் (06161) அக்.18 காலை 10.15 மணிக்கு மதுரையை அடையும். இந்த மெமு ரயிலில் மொத்தம் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இது மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி வழியாக செல்லும்.

மதுரையிலிருந்து தாம்பரத்திற்கு 18-ந்தேதி முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் அக்.18 மதியம் 12 மணிக்கு புறப்படும், அதே நாள் இரவு 7.15 மணிக்கு தாம்பரத்தை அடையும்.

அதேபோல், அக்.18 இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லாத மற்றொரு சிறப்பு மெமு ரயிலும் இயக்கப்படுகிறது. இது மறுநாள் காலை 11.30 மணிக்கு மதுரையை அடையும். தாம்பரத்திற்கு மாற்று ரயிலாக அக்.21 இரவு 8.30 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயிலும் இயக்கப்பட்டு, மறுநாள் காலை 4.30 மணிக்கு தாம்பரத்தை அடையும்.

Related News

Latest News