செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதய சிகிச்சை, தலைக்காய சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, கண் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இங்கு நாளொன்றுக்கு உள்நோயாளியாக 1,000 பேரும் புறநோயாளிகளாக 3,000 பேரும் தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர், இந்த மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த மருத்துவமனையில் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்கும் வார்டு பகுதியில் தேங்கும் குப்பைகளை அள்ளுவதற்கும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கும் தனியார் நிறுவனம் சார்பில் 300 மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வேலை செய்து வருகின்றனர்.அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.10,600 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
இவர்களுக்கு மாத ஊதியம் சரியான முறையில் வழங்குவதில்லை. மாதம் முழுக்க வேலை செய்தாலும் 8600 முதல் 9 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம் வழங்கப்படுவதாகவும போனஸ் உள்ளிட்ட எந்தவித சலுகைகளும் வழங்கப்படவில்லை எனவும் இது சம்பந்தமாக பலமுறை தனியார் நிறுவன மேலாளரிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதை கண்டித்து இன்று காலையில் அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் பிற நோயாளிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மேலாளர் ஒப்பந்த ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ‘எங்களுக்கு கடந்த 4 மாதங்களாக சரிவர ஊதியம் வழங்கவில்லை. அதை கேட்டால், ‘உங்களில் பலருக்கு வயதாகி விட்டது. சரிவர வேலை செய்வதில்லை’ என பல்வேறு காரணங்களை கூறி பலரை நிர்வாகம் நிறுத்தி விடுகிறது. இதனால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.
எங்களுடைய அன்றாட தேவை பூர்த்தி ஆகவில்லை. எனவே நிர்வாகம் உடனடியாக சம்பளத்தை வழங்க வேண்டும்’ என்றனர். இதையடுத்து தனியார் நிறுவன மேலாளர் விரைந்து வந்து, சம்பள பாக்கியை உடனடியாக வழங்கப்படுவதாக கூறி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்
