உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் வடகொரியா தனது ஆதரவை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளது. ரஷ்யா முன்னெடுத்துள்ள இந்த போரை “புனிதமான போர்” என்று வர்ணித்துள்ள வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன், ரஷ்யா வெற்றிபெற முழு ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்ட்ரி பெலோசோவ் வடகொரியா சென்றிருந்தபோது,கிம் ஜாங் உன் இந்த ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். 2024-ஆம் ஆண்டு கையெழுத்தான ராணுவ உடன்படிக்கையின்படி, ரஷ்யாவிற்குத் தேவையான ஏவுகணைகள், வெடிமருந்துகள் மற்றும் ஆயிரக்கணக்கான வீரர்களை வடகொரியா தொடர்ந்து அனுப்பி வருகிறது.
இதற்குப் பதிலடியாக ரஷ்யா, வடகொரியாவிற்குத் தேவையான நிதி உதவிகள், உணவு, எரிசக்தி மற்றும் அதிநவீன ராணுவத் தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறது. இந்தச் சூழலில், உக்ரைன் போரில் உயிரிழந்த வடகொரிய வீரர்களுக்குக் கௌரவம் அளிக்கும் விதமாக,கிம் ஜாங் உன் ஒரு பிரம்மாண்டமான நினைவகத்தைத் திறந்து வைத்துள்ளார்.
உக்ரைனின் குர்ஸ்க் பகுதியில் ரஷ்யப் படைகளுக்கு ஆதரவாகப் போரிட்டு வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தைப் பாராட்டிய கிம், அவர்களின் வீரத்தை உலகமே வியந்து நோக்குவதாகக் கூறியுள்ளார். தென்கொரியாவின் உளவுத்துறையின் தகவல்படி, இந்த போரில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வடகொரிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
சிறைபிடிக்கப்படும் சூழல் ஏற்பட்டால், உயிருடன் சரணடைவதை விட தற்கொலை செய்துகொள்ளுமாறு வீரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிய, அது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் ரஷ்யாவுடனான இந்த ராணுவ உறவை வடகொரியா வலுப்படுத்தி வந்தாலும், மறுபுறம் கொரிய தீபகற்பத்தில் அமைதிக்கான முயற்சியைத் தென்கொரியா முன்னெடுத்துள்ளது
கிம் ஜாங் உன் தென்கொரியாவைத் தனது “மிகப்பெரிய எதிரி” என்று அறிவித்திருந்தாலும், தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி மலர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் அழைப்பு விடுத்துள்ளார். 2018-ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சிமாநாட்டை நினைவு கூர்ந்த அவர், நம்பிக்கையை மீட்டெடுக்கத் தயார் என்று அறிவித்துள்ளார். ஆனால், ரஷ்யாவிற்காகத் தனது வீரர்களை களமிறக்கி, கிம் ஜாங் உன் காட்டும் இந்த தீவிரமான ராணுவப் போக்கு, கொரிய தீபகற்பத்தின் அமைதியை எப்போது வேண்டுமானாலும் குலைக்கலாம் என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
