ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வரும் நிலையில் அதற்கு ஒரு முடிவே இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஷ்ய – உக்ரைன், இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரால் உலகளாவிய பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. மட்டுமல்லாமல் அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை போன்ற காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால், கடந்த 2005ம் ஆண்டு 600 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கம் தற்போது 10 ஆயிரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை 10 நாட்களுக்கும் மேலாக குறைந்து வந்த நிலையில், திடீரென உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. தொடர்ந்து செப்டம்பர் மாதம் தொடங்கிய நிலையில், மாதத்தில் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில் தங்கம், ஆடம்பரம் என்பதை தாண்டி சேமிப்பின் முதல் படியாக கருதப்படுகிறது. இதனால் தங்க நகைகளை வாங்கும் இந்தியர்களுக்கு அண்மைக் காலமாக அதன் விலையேற்றம் கடும் பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மட்டுமல்லாமல், உலகளாவிய சந்தையில் தங்கம், வெள்ளியின் மீதான கவனம் அதிகரிக்கும்போது விரைவில் மிகப்பெரிய மாற்றம் வரும் என சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்தார். இது போன்ற காரணங்களால் தங்கத்துக்கு மாற்று என்ன என்பதை மக்கள் தேடுகின்றனர்.
அவ்வகை மாற்று மட்டுமே தங்கத்தின் விலையேற்றத்துக்கு நிவாரணமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இது ஒரு செய்தி மட்டுமே. பொதுமக்கள் இதை தங்கத்துக்கான முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.