1800 டாலர் பரிசு!

297
Advertisement

சமூக ஊடகத்திலிருந்து விலகியிருக்க மகனுக்குத் தாய் கொடுத்த பரிசு அனைவரையும் ஈர்த்துவருகிறது.

இந்த இணைய யுகத்தில் சிறுவர்முதல் பெரியவர்வரை அனைவரும் மூழ்கியுள்ளனர். சமூக ஊடகக் கணக்கு இல்லாத எவரையும் கண்டுபிடிப்பது அரிது. அதுவும் வளர்ந்த நாடான அமெரிக்காவில் சமூக ஊடகக் கணக்கு இல்லாதவரைக் காண்பது என்பது குதிரைக்கு கொம்பு முளைத்தது போலாகும்.

இருப்பினும், ஒரு தாய் தனது மகனுக்குப் பணம் தருவதாக உறுதியளித்து, 18 வயதுவரை சமூக ஊடகத்திலிருந்து விலகியிருக்கச் செய்துள்ளார். அமெரிக்கத் தாயின் இந்தச் செயல் அங்குள்ளோரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. காரணம், தாயின் அன்புக் கட்டளையை ஏற்று மகன் 6 ஆண்டுகளாக சமூக ஊடகத்தில் தனது நேரத்தை செலவிடாமல் இருந்ததுதான். ஆனால், தற்போது சமூக ஊடகத்தில் அனைத்து கணக்குகளையும் தொடங்கிவிட்டான் என்பதுதான் ஆச்சரியமான செய்தி.

மின்னசோட்டா மாகாணத்தைச் சேர்ந்தவர் லோர்னா கோல்ட்ஸ்ராண்ட் க்ளெஃப்சாஸ். இவர் 6 ஆண்டுகளுக்குமுன் 12 வயது தனது மகன் சிவர்ட்டிடம் சமூக ஊடகங்களில் இருக்க வேண்டாம் என்று கூறினார். தான் சொல்வதைப் பின்பற்றினால், 1,800 டாலர் தருவதாக உறுதியளித்தார்.

தாய் சொல்லைத் தட்டாமல் நடந்துகொண்டான் சிறுவன் சிவர்ட். 6 ஆண்டுகள் கழிந்த நிலையில், அதாவது, சிவர்ட்டுக்கு 18 வயது பூர்த்தியான நிலையில், அந்தப் பாசத்தாய், தான் வாக்குறுதி அளித்தபடி 1800 டாலர் தொகையை வழங்கி மகனைக் கௌரவித்துள்ளார்.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னையின் வளர்ப்பிலே என்கிற கவிஞர் புலமைப் பித்தனின் திரைப்படப் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

டீனேஜ் பருவத்தில் மகனை நல்வழிப்படுத்திய தாயையும், தாயின் அறிவுரை ஏற்றுக்கொண்ட மகனையும் இணையதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.