தற்போது பல்வேறு ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவுகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் ஒன்று தான் சாட்ஜிபிடி. இது ஓபன் ஏஐ எனும் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். இந்தியா மட்டுமின்றி நாடு முழுவதும் சாட்ஜிபிடியை ஏராளமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலம், டெலாண்டு என்னும் இடத்தில் உள்ள சவுத்வெஸ்டர்ன் நடுநிலைப் பள்ளியில் 13 வயது மாணவன் மற்றும் அவன் நண்பரை எப்படி கொலை செய்வது என்று பள்ளி நேரத்திலேயே, பள்ளி வழங்கிய கணினியில் ChatGPT யிடம் கேட்டுள்ளான்.
இந்த செயல்முறை பள்ளியின் டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பால் உடனடியாக பதிவு செய்யப்பட்டது. அதாவது, மாணவர்கள் ஆபத்தான கேள்விகள் கேட்டால், அந்த கேள்விகள் தானாகவே பள்ளி நிர்வாகமும் போலீசாருக்கும் அலர்ட் செய்யப்படும் முறையாக அந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதைத்தான் அறிந்திராததால் அந்த மாணவன் தனது நண்பரை கொலை செய்வதற்கான யோசனையை கேட்டு உடனே பள்ளி நிர்வாகத்துக்கு மற்றும் போலீசாருக்கு தகவல் சென்றது.
அடுத்த சில நிமிடங்களில் போலீசார் பள்ளிக்கு வந்து அந்த மாணவனை கைது செய்து விசாரணை நடத்தினர். மாணவன் போலீசாருக்கு “யாரையும் கொல்ல எண்ணம் எனக்கு இல்லை, சும்மா தான் கேட்டேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.