ரசகுல்லாவால் 12 ரயில்கள் ரத்துசெய்யப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்ட ரயில்கள்
வேறு பாதையில் திருப்பிவிடப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்மையில் பீகார் மாநிலம், லக்கிசராய்ப் பகுதியில் உள்ள பராஹியா ரயில்
நிலையத்தில் 10 ரயில்களை நிறுத்தக்கோரி உள்ளூர்வாசிகள் 40 மணிநேரம்
போராட்டம் நடத்தினர்.. இதனால் ரயில்களின் இயக்கம் 40 மணி நேரம்வரை
நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக ஹவுரா- டெல்லிப் பாதையில் 12 ரயில்கள்
24 மணி நேரத்துக்கு ரத்துசெய்யப்பட்டதோடு, 100க்கும் மேற்பட்ட ரயில்கள்
மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டதால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.
லக்சிசராய்ப் பகுதியில் தயாரிக்கப்படும் ரசகுல்லாக்கள் தனிச்சுவை மிகுந்தது.
இந்த ரசகுல்லாக்கள் இந்தியா முழுவதும் பிரபலானவை. திருமணத்தின்போது
அல்லது ஏதேனும் விஷேச நிகழ்வின்போது விருந்தினர்களுக்குப் பரிமாறுவதற்காக
இந்த ரசகுல்லாக்களை வாங்குவதற்கு இந்த சிறிய நகரத்துக்கு ஏராளமான மக்கள்
வருகின்றனர்.
பல உள்ளூர்வாசிகள் ரயில்வே தண்டவாளங்களில் கூடாரங்களை அமைத்துள்ளனர்.
200க்கும் மேற்பட்ட கடைகளில் ரசகுல்லாக்கள் தயாரிப்பில் ஈடுபட்டு டன் கணக்கில்
ரசகுல்லாக்கள் தினமும் தயாரிக்கப்படுகின்றன.
ரயில்கள்மூலம் எல்லாப் பகுதிகளுக்கும் ரசகுல்லாவை விநியோகிப்பது எளிதானதாகவும்
செலவு குறைந்ததாகவும் இருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கு நேரத்தின்போது
இங்கு ரயில்கள் நிறுத்தப்படவில்லை. அந்த நிலை தற்போதும் தொடர்கிறது. இதனால்
ரசகுல்லா வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தற்போது லக்கிசராய்ப் பகுதி மக்களின் போராட்டம் பலனைத் தந்துள்ளது. பராஹியா
ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்றுசெல்ல ஆவன செய்வதாக ரயில்வே நிர்வாகம்
எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.