தேர்வு எழுத சென்ற இடத்தில் குழந்தை பெற்ற 10ம் வகுப்பு மாணவி

மத்திய பிரதேச மாநிலத்தின் தார் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை கணிதத் தேர்வு நடைபெற்றது. தேர்வு நடைபெற்று கொண்டிருந்தபோது, 17 வயதுடைய மாணவி ஒருவர் திடீரென எழுந்து கழிப்பறைக்கு சென்றார்.

நீண்ட நேரமாக அவர் தேர்வு அறைக்கு திரும்பாததால் சந்தேகமடைந்த பெண் ஆசிரியர் கழிப்பறைக்கு சென்று பார்த்தார். அப்போது, அந்த மாணவிக்கு குறைமாத குழந்தை பிறந்து, குழந்தை அழுதுகொண்டிருந்தது தெரியவந்தது. இதைப் பார்த்து ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக பள்ளி பணியாளர்களை அழைத்து, மாணவியும் குழந்தையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவர்கள் தாய் மற்றும் குழந்தை இருவரையும் பாதுகாப்பாக காப்பாற்றினர். தற்போது இருவரும் நலமாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி, ஒரு மாணவன் மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். மேலும், சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என அவர் மிரட்டியதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக கர்ப்பம் தொடர்பான விஷயத்தை பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News