தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை உற்சாகமாக தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை போட்டியிடுவதால் நான்கு முனை போட்டி நிலவுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
மொத்தமாக 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் உள்ள சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். வாக்குப்பதிவுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைத்து வாக்காளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்த தேர்தலில் தங்களுக்கு 100 சதவீதம் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தேவையற்ற கேள்விகள் வேண்டாம்” என்று கூறி தவிர்த்தார். தேர்தல் சூழல் மாநிலம் முழுவதும் பரபரப்பாக நீடித்து வருகிறது.
