மணல் மூடிய பனியின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடுமையான வெயிலுக்குப் பெயர்போன சௌதி அரேபியாவில் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டது. தபிக் என்னும் பகுதியில் அதிசய நிகழ்வாக அந்தப் பனியை மணல் மூடியது. அதைக்கண்டு ஏராளமானோர் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
சௌதி அரேபியாவில் ஜோர்டான் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் ஜபல் அல் லாஸ், அல் தாஹீர், ஜபல் அல்குவான் ஆகிய மலைகள் உள்ளன. இங்கு ஒவ்வோராண்டும் ஒன்றுமுதல் 3 வாரங்களுக்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்படுகிறது.
இந்தப் பனிப்பொழிவைக்காண சௌதி அரேபியாவின் பிற பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வருகின்றனர். அதனால், இந்தப் பகுதியே திடீர் சுற்றுலாத் தலமாக உருவெடுத்துவிடுகிறது.
கடல் மட்டத்திலிருந்து 2,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைப்பகுதியில் அதிக அளவில் பாதாம் கிடைக்கிறது. அதனால் இந்த மலைப்பகுதியை பாதாம் மலை என்றே இங்குள்ளவர்கள் அழைக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், இந்தப் பிராந்தியத்தில்தான் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப் பயன்படும் நறுமணத் தாவரங்கள் அதிக எண்ணிக்கையில் வளர்கின்றன.
தற்போது அதனை மேலும் வலுப்படுத்தும் மற்றொரு அதிசயமாக பாலைவனத்தில் பொழிந்துள்ள இந்தப் பனியை மணல் மூடியுள்ளது.