Friday, December 27, 2024

பட்டுப் புடவை உடுத்தி உணவு பரிமாறும் ரோபா சுந்தரி

ஹோட்டலில் பட்டுப்புடவை உடுத்தி உணவு பரிமாறும் ரோபா அனைவரையும் கவர்ந்து வருகிறது.

கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்திலுள்ள ஓர் உணவகத்தில்தான் இந்தப் புதுமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த உணவகத்தில் சப்ளையர்களுக்குப் பதிலாக ரோபோ உணவு பரிமாறுகிறது. அதிலும், விநோதமாக, பெண்களைப்போலப் பட்டுப் புடவை அணிந்து உணவு பரிமாறுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

பாரம்பரிய மைசூரு பட்டுப் புடவை, நெக்லஸ், வளையல் அணிந்து நிஜப் பெண்போலத் தோற்றம்கொண்டுள்ள அந்த ரோபோவுக்கு சுந்தரி என்று பெயரிட்டுள்ளது ஹோட்டல் நிர்வாகம்.

வாடிக்கையாளர்களை வரவேற்பதிலிருந்து தண்ணீர், உணவு வழங்குவதுவரை அத்தனைப் பணிகளையும் அந்த ரோபோ சுந்தரி செய்கிறது.

வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான உணவை சப்ளையர்களிடம் சொல்ல, அவர்கள் அந்த லிஸ்டை ரோபோ சுந்தரியிடம் தருகிறார்கள். ரோபோ சுந்தரி அதை சமையல்காரர்களிடம் கொண்டுசேர்க்கிறது. அந்த லிஸ்டின்படி உணவு தயார் செய்ததும் சமையல்காரர்கள் ரோபோ சுந்தரியிடம் தருகிறார்கள். அந்த ஆர்டர்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்க்கிறது.

ரோபோ சுந்தரியின் இந்த சேவை வாடிக்கையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

10 கிலோ உணவு வரை ரோபோ சுந்தரி சுமந்துசெல்கிறது. பேட்டரியால் இயங்கும் இந்த ரோபோவுக்கு 4 மணி நேரம் சார்ஜ் ஏற்றினால் 8 மணிநேரம் இயங்குகிறது. சமையல் அறையிலிருந்து சாப்பாட்டு மேஜை அறை வரை ரோபோ செல்ல, ஒரு காந்தப்பட்டை அமைக்கப்பட்டுள்ளது. ரோபோவில் சென்சார் உள்ளதால், வழியில் மனிதர்கள் வந்தால் அது நின்றுவிடுகிறது.

இந்த ரோபோவின் விலை இரண்டரை லட்ச ரூபாய் எனக் கூறப்படுகிறது.

மருத்துவம், விஞ்ஞானம், தொழிற்சாலை, வீட்டுவேலை உள்ளிட்ட பல துறைகளில் ரோபோக்களின் சேவை தொடங்கிவிட்ட நிலையில், விருந்தோம்பல் துறையிலும் ரோபோக்களின் வருகையை ஒரு புரட்சி என்றே கூறலாம்.

ஆனால், அண்மையில், சீனாவில் ஒருவர் ரோபோவைத் திருமணம் செய்துள்ள நிலையில், ரோபோக்களின் வருகையால் ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் என்ன சொல்வதெனத் தெரியாமல் தவிப்பில் உள்ளனர்.

Latest news