Thursday, December 25, 2025

மிளகாய் பொடியை கல்லூரி மாணவி மீது வீசி இளைஞர் செய்த பயங்கரம்

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் யாமினி பிரியா (வயது 20) என்ற கல்லூரி மாணவி, பனசங்கரியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பார்ம் படித்து வந்தார். நேற்று கல்லூரிக்கு சென்ற அவர் தேர்வை எழுதிவிட்டு மதியம் வீட்டிற்கு புறப்பட்டார்.

அப்போது அங்கு வந்த வாலிபர், யாமினியை வழிமறித்து தகராறு செய்துள்ளார். பின்னர் தன்னிடம் இருந்த மிளகாய் பொடியை யாமினியின் கண்ணில் வீசியுள்ளார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் யாமினியின் கழுத்தில் சரமாரியாக வாலிபர் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் அந்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவி யாமினியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில், யாமினியை, சுதந்திர பாளையாவை சேர்ந்த விக்னேஷ் தான் கொலை செய்தது தெரியவந்தது.

யாமினியை, விக்னேஷ் காதலித்துள்ளார். ஆனால் விக்னேசின் காதலை ஏற்க யாமினி மறுத்து விட்டார். தன்னை காதலிக்க மறுத்ததால் ஆத்திரத்தில் இருந்து வந்த விக்னேஷ், கல்லூரி முடிந்து யாமினி வீட்டுக்கு வருவதை எதிர்பார்த்து காத்திருந்து, படுகொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. தலைமறைவான விக்னேசை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Related News

Latest News