சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே ஒட்டப்பட்டி ஏரிக்காடு பகுதியை சேர்ந்த ராஜா(25).
கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் அவ்வப்போது வீடு கட்டுமான வேலைக்கு (சென்ட்ரிங்) சென்று வந்தார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னையில் 10 நாட்கள் தங்கியிருந்து கட்டுமான வேலை செய்யவேண்டும் இதனால் வருமாறு தன்னுடன் ராஜாவை சுரேஷ் அழைத்துள்ளார். இதையடுத்து இருவரும் சென்னைக்கு சென்று தங்கியிருந்து சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். ஆனால் 15 நாட்கள் ஆகியும் சம்பளம் ராஜாவுக்கு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதுபற்றி அவர் சுரேஷிடம் கேட்டபோது, இப்போதைக்கு சம்பவம் எதுவும் தரமுடியாது எனக்கூறி அடித்து தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ராஜா விரக்தியில் சென்னையில் இருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.
இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த ராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும், காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே ராஜா தற்கொலை செய்து கொண்ட அறையில் அவர், காரிப்பட்டி காவல் ஆய்வாளருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. இதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்வதற்கு முன்பாக ராஜா எழுதிய அந்த கடிதத்தில், “சென்னையில் கட்டுமான பணிக்காக வேலைக்கு சுரேஷ் என்பவருடன் சென்றேன். ஆனால் 10 நாட்கள் வேலை செய்தும் அதற்கான சம்பளத்தை தரவில்லை. இதுபற்றி கேட்டபோது சிலர் என்னை அடித்து தாக்கினர். இதனால் படுகாயமடைந்த நான் அங்கிருந்து தப்பித்து ஊருக்கு வந்துவிட்டேன். எனவே, சம்பளம் தர மறுத்து அடித்து தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுப்பியுள்ளார். மேலும் இது ஒரு விழிப்புணர்வு மரணம், என்று ராஜா உருக்கமாக எழுதியுள்ளார்.
இதனால் அவரது தற்கொலைக்கு காரணம் யார்? என்பது குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலைக்கு தூண்டியதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சுரேஷ், சேகர் ஆகிய இருவர் மீது வழக்குபதிவு செய்து, இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.