ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் ஸ்பார்ஸ் அகர்வால், பேசும் குரலை நேரடியாக மற்றொரு மொழியில் மொழிபெயர்க்கும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கி உலகம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளார்.
வாராணசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் மாணவராக இருக்கும் அவர், “பிக்ஸா” என்ற ஏஐ ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் “லூனா” என்ற ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். மனிதர்கள் பேசும் போதே, குரலை உணர்ச்சியுடன் மற்றொரு மொழியில் நேரடியாக மொழிபெயர்க்கும் திறன் இந்த லூனா ஏஐ-யில் உள்ளது.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால், அது பேச்சின் உணர்ச்சி, தொனி, மற்றும் வேகத்தை அசல் பேச்சு போலவே தக்கவைத்து மொழிபெயர்க்கிறது. அதுமட்டுமன்றி, பேச்சின் சுருதி மற்றும் குரல் வண்ணத்தை மாற்றி பாடலாகவும் உருவாக்கும் திறன் கொண்டது. இதன் மூலம், மனிதர்களுடன் இயல்பான உரையாடலை உருவாக்கும் திறனும் இதில் உள்ளது.
இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஸ்பார்ஸ் அகர்வால், சமீபத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து பாராட்டுப் பெற்றார்.
‘இந்தியா ஏஐ துறையில் எங்கே இருக்கிறது என பலர் கேட்கிறார்கள். அதற்கான பதில் இந்த லூனா ஏஐதான். உலகின் முதல் நேரடி பேச்சு மொழிபெயர்ப்பு செயற்கை நுண்ணறிவு இது. உலகத் தரத்திலான கண்டுபிடிப்பு இந்தியாவில் இருந்து வந்துள்ளது என்பது பெருமை,’ என ஸ்பார்ஸ் அகர்வால் தெரிவித்தார்.
அவர் உடன் நிதிஷ் கார்த்திக், அபூர்வ் சிங் மற்றும் பிரத்யுஷ் குமார் ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ளனர். லூனா ஏஐ, செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாவின் பெருமையை உயர்த்திய முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.
