வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூல் பணியானது தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது மேற்கண்ட நிறுவனத்துடனான ஒப்பந்தம் நேற்றுடன் (20.07.2025) முடிவடைந்தது.
இதனையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தத்திற்கான ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் சார்பில் மறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை பொதுமக்கள் தங்கள் வாகனங்களை, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி நிறுத்திக் கொள்ளலாம்.
இது தொடர்பான புகார்களுக்கு, பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.