தங்கத்தின் விலை வரலாறு காணாத உயரத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் புதிய தங்கம் வாங்குவதில் சிரமம் அடைந்து வருகிறார்கள். ஆனால், மார்க்கெட்டில் இருக்கும் விலையை விட 3% முதல் 4% வரை குறைவாக தங்கத்தை சட்டபூர்வமாக வாங்கும் வழி இருப்பதாக நிதி நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தனது யூடியூப் சேனலில் அவர் கூறியதாவது: சில நிறுவனங்கள் தங்கத்தை நேரடியாக ஏலத்தில் வாங்குகின்றன. நகைக்கடன் வாங்கியவர்கள் கடனை செலுத்த முடியாத சூழலில், அந்த நகைகள் ஏலத்திற்கு வரும். அப்போதுதான் இந்நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி, பின்னர் 2% அல்லது 3% வித்தியாசத்தில் விற்பனை செய்கின்றன. இதுவே அவர்களின் லாபம். ஆனால், இவ்வாறு தங்கம் வாங்குபவர்கள் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
மேலும், வங்கி மேலாளர்களிடம் தொடர்பு கொண்டாலும், கடன் நிறைவு செய்யும் பொருட்டு ஏலத்தில் வரும் தங்கத்தை சுமார் 4% வரை குறைந்த விலையில் பெற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். இருந்தாலும், ‘நான் தனிப்பட்ட முறையில் இப்படிப் பட்ட தங்கத்தை வாங்க மாட்டேன். பிறர் கஷ்டப்பட்டு விற்கும் நகை எனக்குத் தேவையில்லை’ என்று ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், கார் மற்றும் தங்கத்தை ஒப்பிடக்கூடாது என்றும் அவர் விளக்கினார். ‘கார் ஒரு சொத்து அல்ல, செலவு மட்டுமே. ஷோரூமில் இருந்து வெளியே வந்தவுடன் அதன் மதிப்பு குறைந்து விடும். ஆனால் தங்கம் தலைமுறை தலைமுறையாக வைத்திருக்கும் சொத்து’ எனவும் அவர் கூறினார்.
இது ஒரு செய்தி மட்டுமே. பொதுமக்கள் இதை தங்கத்துக்கான முதலீட்டுக்கான ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.