Saturday, September 6, 2025

உலகின் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா?

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 5வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 3 இடங்கள் முன்னேறி 136வது இடத்தில் உள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்படுகிறது. மகிழ்ச்சியை பற்றிய மக்களின் சொந்த மதிப்பீடு, ஜி.டி.பி., தனிப்பட்ட நல்வாழ்வு, தனிநபர் சுதந்திரம், ஊழல் மற்றும் சமூகத் தரவுகளின் அடிப்படையில் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு முன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், பின்லாந்து தொடர்ந்து 5வது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறது.

டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த 5 இடங்களில் உள்ளன. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட மகிழ்ச்சி குறியீட்டில் பின் தங்கியிருந்த அமெரிக்கா தற்போது, 16வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் 139வது இடத்திலிருந்த இந்தியா 3 இடங்கள் முன்னேறி 136வது இடத்தில் உள்ளது. அண்டை நாடான சீனா 72வது இடத்திலும், நேபாளம் 84வது இடத்திலும், வங்கதேசம் 94வது இடத்திலும் உள்ளன. கடன் தொல்லையில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு 121வது இடமும், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு 127வது இடமும் கொடுக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News