பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவன நிதித் துறையின் உயர்நிலைப் பெண் அதிகாரி, இணைய வழி மோசடியில் சிக்கி ரூ.31.83 கோடி இழந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சம் பார்த்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி, ஒரு மர்ம நபர் வாட்ஸ்அப் மூலம் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு, “நாங்கள் மும்பையிலுள்ள கூரியர் நிறுவனம். வெளிநாட்டிலிருந்து உங்களுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. அதில் 4 பாஸ்போர்ட், 3 கிரெடிட் கார்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் உள்ளன. நீங்கள் உடனடியாக மும்பைக்கு வராவிட்டால், போலீசில் புகார் அளிக்கப்படும்,” என்று எச்சரித்தார்.
சில நாள்கள் கழித்து “பிரதீப் சிங்” என்ற நபர் ஸ்கைப் வழியாக அவரைத் தொடர்பு கொண்டு, தன்னை ‘CBI அதிகாரி’ என அறிமுகப்படுத்தினார். “தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தியதாக உங்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதிலிருந்து விடுபட்டிட, உங்கள் சொத்து மற்றும் வங்கி விவரங்களை ரிசர்வ் வங்கியின் நிதி புலனாய்வு பிரிவுக்கு சமர்ப்பிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
அதன்பின், 187 முறை பல்வேறு பெயர்களில் பண பரிமாற்றம் நடைபெற்று, மொத்தம் ரூ.31.83 கோடி அந்த பெண்ணிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. “மார்ச் 26க்குள் பணத்தை திருப்பித் தருவோம்” என்று கூறியிருந்த மோசடி கும்பல், பின்னர் தொடர்பை நிறுத்திவிட்டது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், கடந்த நவம்பர் 14ஆம் தேதி பெங்களூரு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இணைய குற்றப்பிரிவு மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளது.
