கரூர் அருகே பட்டப்பகலில், வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த தாளியாபட்டி கிராமத்தில், வயதான தம்பதி நகுல்சாமி மற்றும் சந்திரமதி ஆகியோர் வசித்து வருகின்றனர். நகுல்சாமி, தனது வீட்டின் அருகில் இருக்கும் 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும், நேற்று முன் தினம் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர். அப்போது, பட்டப்பகலில், பெண் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 சவரன் நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார்.
இது குறித்து சிசிடிவி ஆதாரங்களுடன் வெள்ளியணை காவல் நிலையத்தில் விவசாயி நகுல்சாமி புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, வெள்ளியணை பகுதியை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் விவசாயில் வீட்டில் திருட்டில் ஈடுபட்டது உறுதியானது. இதை தொடர்ந்து, அந்த பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர்.