ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த வசுந்தரா (34) என்பவரின் முன்னாள் காதலர், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாத வசுந்தரா, அவர்களை பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
வசுந்தராவின் முன்னாள் காதலரின் மனைவி, ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் கடந்த ஜனவரி 9ஆம் தேதி மதிய உணவிற்குப் பிறகு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, வசுந்தரா மற்றும் அவரது கூட்டாளிகள் சாலை விபத்து போல ஒரு சம்பவத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
அந்த குழப்பமான சூழ்நிலையை பயன்படுத்தி, ஆட்டோவில் வைத்து அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வி வைரஸ் செலுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, குற்றம் செய்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், வசுந்தரா உட்பட நான்கு பேரைக் கைது செய்தனர்.
போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், ஆராய்ச்சி தேவைக்காக வேண்டும் என கூறி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடமிருந்து எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்த மாதிரிகளை வசுந்தரா பெற்றதாக தெரிய வந்துள்ளது. அந்த ரத்த மாதிரிகளை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்து, தனது முன்னாள் காதலரின் மனைவிக்கு அவர் செலுத்தியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் ஆந்திர மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
