நகை, பணத்திற்காக திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை, கரூரில் போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் போத்தனூரை சேர்ந்த ரேணுகா என்பவருக்கும் கரூர் மாவட்டம் புஞ்சை கடம்பக்குறிச்சியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரேணுகாவிற்கு வந்த செல்போன் அழைப்பை எடுத்து ரமேஷ் பேசியபோது, பணம் நகைகளை ஏன் எடுத்து வரவில்லை என பழனிகுமார் என்பவர் கேட்டுள்ளார்.
இதுகுறித்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரமேஷ் அளித்த புகாரின் பேரில், ரேணுகாவிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் நடந்ததும், 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. ரேணுகா நகை பணத்திற்காக திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததால், போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.