வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை பகுதியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் கல்லூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் செங்கல்பட்டு பகுதியில் உள்ள தனியார் செல்போன் கடையில் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த சுமதி (42) என்ற பெண்மணி அடிக்கடி கடைக்கு வந்து சென்றுள்ளார்.
அப்பொழுது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தான் வருவாய்த் துறையில் வேலை செய்வதாகவும் உங்களுக்கு வருவாய்த் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சந்தோஷ் மற்றும் வெங்கடேசன் ஆகியோரிடம் 17.5 லட்சம் ரூபாய் பணத்தை கடந்த ஆண்டு பணத்தைப் பெற்றுள்ளார்.
இதனை அடுத்து அவர்களுக்கு வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம நிர்வாக உதவி அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கான பணி ஆணை மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை அனுப்பி உள்ளார்.
இதனையடுத்து இது குறித்து விசாரணை செய்த சந்தோஷ் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் சுமதி அனுப்பிய பணி ஆணை மற்றும் அடையாள அட்டை போலி என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து அவர்கள் சுமதியிடம் பணத்தை திருப்பி கேட்டு உள்ளனர் சுமதி பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து சந்தோஷ் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த குடியாத்தம் நகர போலீசார் செங்கல்பட்டு பகுதியில் இருந்த சுமதியை நேற்று கைது செய்து மேலும் அவரிடம் இருந்த செல்போன்கள் மற்றும் வங்கி ஏடிஎம் மற்றும் போலி ரப்பர் ஸ்டாம்ப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
