Shopping போக கையில் பணம் எடுத்துக்கொண்டு போனதெல்லாம் மறந்தே போய்விட்டது நம்மில் பலருக்கு. டீக்கடை முதல் நகைக்கடை வரை எல்லா பண பரிவர்த்தனைகளும் உள்ளங்கையில் வந்துவிட்டன. ஒரு Mobile Phone இருந்தால் போதும். UPI பரிவர்த்தனைகளை எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டென முடித்துவிடலாம். இப்படி UPI பரிவர்த்தனைகள் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பரிவர்த்தனைகளுக்கு சேவை வரி அதாவது GST விதிக்கப்படும் என்ற ஒரு தகவல் காட்டுத்தீ போல சரசரவென பரவியதை நம்மில் பலரும் ஒருசில நாட்களாக கேள்விப்பட்டிருப்போம்.
இந்நிலையில் 2000 ரூபாய்க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு GST விதிக்கப்படும் என பரப்பப்படும் தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, 2000 ரூபாய்க்கு மேற்பட்ட UPI பண பரிவர்த்தனைகளுக்கு GST விதிப்பது தொடர்பாக எந்த பரிசீலனையும் இல்லை எனவும் 2000 ரூபாய்க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு GST விதிக்கப்படும் என பரவும் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் “UPI வழியாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை தொடர்ந்து ஊக்குவிக்க உறுதி பூண்டுள்ளோம்” என குறிப்பிட்டிருப்பது பரப்பப்படும் பொய்யான செய்திக்கு தலைகீழாக இருக்கிறது.
தற்போது வரை UPI செயலிகளான போன்பே, கூகுள்பே, பேடிஎம் உள்ளிட்ட பிற செயலிகளில் நாம் பணப்பரிமாற்றம் செய்யும்போது எந்த வரியும் விதிக்கப்படுவது இல்லை. இருப்பினும் எதிர்க்காலத்தில் UPI பணப்பரிமாற்றத்துக்கு 5 சதவீதம் GST எனும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியிருப்பது மக்களை சற்றே கலக்கத்துக்குள்ளாக்கியிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.