12 ஆண்டுகள் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்திய போப் பிரான்சிஸ், ஏப்ரல் 21ம் தேதி காலமானார். அவரின் மறைவுக்கு உலக நாடுகள் இரங்கல் தெரிவித்து வருகின்றன. இதையடுத்து வருகின்ற 26ம் தேதி காலை 8.30 மணியளவில், அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறும் என வாடிகன் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் போப் பிரான்சிஸ் மறைவால், அவருக்கு வழங்கப்பட்ட மீனவ மோதிரம் உடைக்கப்பட உள்ளது. முதலாம் போப் என்று நம்பப்படுகிற இயேசுவின் சீடராகிய பீட்டர் படகில் அமர்ந்து கடலில் வலையை வீசுவது போல, மோதிரம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கடவுளின் பக்கம் மனிதர்களை இழுப்பது என்ற பொருளில் இது அமைந்துள்ளது.
இந்த மீனவ மோதிரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இயேசுவின் சீடர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள் ஆவர்
ஒவ்வொரு போப்பும் தனித்தனி மீனவர் மோதிரத்தை அணிவது வழக்கம். பொதுவாக போப்பை சந்திக்கும் போது, மக்கள் இந்த மோதிரத்தை முத்தமிடுகிறார்கள். அப்படி மக்கள் முத்தமிடும்போது அது இயேசுவை முத்தமிடுவதாக நம்பப்படுகிறது; இந்த மீனவர் மோதிரம் உடைக்கப்பட்டால், ஒரு போப்பின் அதிகாரம் முடிந்துவிட்டதாக அர்த்தமாகும்.
இத்தோடு போப்பிற்கு வழங்கப்பட்ட பதக்கமும் உடைக்கப்படும். இந்த மோதிரமும், பதக்கமும் போப்பால் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்படுபவை. போப் மறைவிற்கு பிறகு யாரும் அவற்றை தவறாக பயன்படுத்தக் கூடாது, என்னும் நோக்கத்திலும் இவை உடைக்கப்படுகின்றன.