காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதன் பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில், 2026 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் ஆயுத மோதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சிந்தனைக் குழு கணிப்பு வெளியிட்டுள்ளது. கவுன்சில் ஆன் பாரின் ரிலேஷன்ஸ் (Council on Foreign Relations) என்ற அமைப்பு, அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நிபுணர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பயங்கரவாதச் செயல்பாடுகள் அதிகரிப்பதன் காரணமாக 2026 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஆயுத மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்கள் மீண்டும் அதிகரித்தால், 2026 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையேவும் ஆயுத மோதல் ஏற்படுவதற்கு மிதமான வாய்ப்பு உள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
