இந்தியாவில் தங்கம் விலை ஏற்றத்தால் கவலையில் இருந்தவர்களுக்கு புதிய தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிப்பு ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. சமீபத்தில் ராஜஸ்தான், ஒடிசா, மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எந்தெந்த மாநிலங்களில் தங்க சுரங்கங்கள்?
ராஜஸ்தானில் பன்ஸ்வாரா மாவட்டத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இங்கு 113 மில்லியன் டன் தங்கத் தாதுக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுரங்கம் செயல்பட ஆரம்பித்தால் இந்தியாவின் மொத்த தங்கக் தேவையின் 25% வரை வழங்க இயலும் என்று கூறப்படுகிறது.
ஒடிசா மாநிலத்தில் தியோகர், சுந்தர்கர், நபரங்க்பூர், மயூர்பன்ச் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கே 10 முதல் 20 மெட்ரிக் டன் வரை தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறு உறுதியாகியுள்ளதால், வருங்காலத்தில் இந்த பகுதிகள் பிரதான தங்க உற்பத்தியாளர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் ஜபல்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தங்கத்தின் இருப்பு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. முழுமையான தகவல்கள் இன்னும் வருகை தரும் போது, இந்த மாநிலமும் எதிர்காலத்தில் முக்கியமான தங்கச் சுரங்க மையமாக மாறும்.
தங்கம் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டால், நாட்டின் தங்க இறக்குமதி தேவையை குறைக்கும் என்பது நிபுணர்களின் கருத்து. உள்நாட்டு தங்க உற்பத்தி அதிகரிப்பதால், தங்கம் வாங்கும் மக்களுக்கு விலை குறைந்திருக்க வாய்ப்பு உள்ளது எனவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், விலை நிர்ணயம் சர்வதேச சந்தை, அரசின் கொள்கைகள், சந்தை தேவை மற்றும் ரூபாயின் மதிப்பு ஆகியவற்றிலும் சார்ந்துள்ளது.
ஆண்டுக்கு எத்தனை தங்கம்?
தற்போது இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1.6 டன் மட்டுமே தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதிய சுரங்கங்கள் செயல்பட்டால் இந்த அளவு கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்புகள், இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்புக்கும் சாதகமாக அமையும். அரசு விரைவில் இந்த சுரங்கங்களை திறக்கவும் திட்டமிட்டுள்ளது.
