அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கடந்த மே மாதம் நடந்த இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலை தாம் தடுத்ததாக மீண்டும் தெரிவித்துள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ‘அமெரிக்காவுக்கு வரி விதிப்பு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது. அதோடு உலகளவில் அமைதியை நிலைநிறுத்தும் கருவியாகவும் அது பயன்படுகிறது. வரி விதிப்பு மற்றும் வணிக விவகாரங்களை சுட்டிக்காட்டி பல போர்களை நிறுத்தியுள்ளேன். இந்தியா, பாகிஸ்தான் மோதலின் போதும் நான் தலையிட்டு சமரசம் செய்தேன். என்ன சொன்னேன் என்பதை வெளிப்படுத்த விரும்பவில்லை, ஆனால் அதன் விளைவாக இரு தரப்பும் மோதலை நிறுத்தின’ என்று தெரிவித்தார்.
இந்தியா–பாகிஸ்தான் இடையிலான மோதலை தாம் நிறுத்தியதாக ட்ரம்ப், மே 10க்கு பிறகு பல முறை கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இதோடு உலகளவில் நடக்கும் பல போர்களையும் தாம் நிறுத்தியதாக தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ஆயுதப்படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், மே 7 முதல் 10ஆம் தேதி வரை பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மற்றும் விமானத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தின. இதற்கு எதிராக பாகிஸ்தான் படைகளும் இந்திய எல்லையை குறிவைத்து தாக்குதலுக்கு முயன்றது. ஆனால் இந்திய பாதுகாப்பு படை அதனை முறியடித்தது.
இறுதியில் இருதரப்பினரிடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்த சமரசம், இந்தியா–பாகிஸ்தான் இடையிலான நேரடி பேச்சுவார்த்தையால் மட்டுமே நிகழ்ந்தது, மூன்றாம் தரப்பின் பங்கு இல்லை என்று இந்திய அரசு தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.