தமிழக அரசியலில் 62 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்திகளாக இருந்த திராவிடப் பேரியக்கங்களின் கோட்டையை ஒற்றை ஆளாகத் தகர்த்து எறிந்திருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்கிற மேஜிக் நம்பரை எட்ட இன்னும் சில அடிகள் விஜய் நடக்க வேண்டியிருக்கிறது. இதனால் சென்னை முதல் டெல்லி வரை இப்போது அரசியல் பேச்சுவார்த்தைகள் அனல் பறக்கின்றன.
தற்போதுள்ள நிலவரப்படி, திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்ய இருப்பதால் தவெக-வின் பலம் 107-ஆகக் குறையும். இந்தச் சூழலில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தனது 5 இடங்களுடன் விஜய்க்கு ஆதரவு தர முன்வந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் மட்டும் போதாது என்பதால், 2 இடங்களைக் கொண்ட விசிக மற்றும் 4 இடங்களைக் கொண்ட பாமக ஆகிய கட்சிகளுடனும் தவெக ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. இந்தச் சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்தால் விஜய்யால் எளிதாக 118 இடங்களைத் தாண்டிவிட முடியும். ஆனால், இதில் இருக்கும் சிக்கல்களைத் தவிர்க்க விஜய் ஒரு மாற்றுத் திட்டத்தையும் கையில் எடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன் ஒரு பகுதியாகத்தான், இன்று காலை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு தவெக நிர்வாகிகள் திடீர் வருகை தந்தனர். இந்தச் சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் பதவியேற்பு விழாவிற்கான அழைப்பு மட்டும்தானா? அல்லது 47 இடங்களை வைத்துள்ள அதிமுக-வுடன் இணைந்து ஒரு மெகா கூட்டணியாக ஆட்சி அமைக்க விஜய் திட்டமிடுகிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அதிமுக ஆதரவு அளித்தால், எந்தவித முட்டுக்கட்டையும் இன்றி விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்க முடியும்.
அதே சமயம், தங்களுக்கு துரோகம் செய்துவிட்டு காங்கிரஸ் கட்சி விஜய்யுடன் கைகோர்ப்பதை ‘முதுகில் குத்தும் செயல்’ என திமுக விமர்சித்து வருகிறது. இடதுசாரி கட்சிகளோ மே 8-ஆம் தேதி வரை கால அவகாசம் கேட்டுள்ளன. ஆனால் அதற்குள்ளாகவே, அதாவது மே 7-ஆம் தேதியே முதலமைச்சராகப் பதவியேற்க விஜய் தீவிரமாக இருக்கிறார்.
பணபலம், அதிகார பலம் கொண்ட திராவிடக் கட்சிகளுக்கு மத்தியில், இந்த எண்கள் விளையாட்டில் விஜய் வெற்றி பெற்று கோட்டையில் கொடியேற்றுவாரா? அல்லது கடைசி நிமிடத்தில் கூட்டணிக் கணக்குகள் மாறுமா? என்பதை ஒட்டு மொத்த தமிழகமும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறது.
