தங்கம் விலை தாறுமாறாக உயருமா? மத்திய அரசு சொன்ன நிம்மதி செய்தி!

சர்வதேச சந்தையில் நிலவி வரும் ஈரான் போர் பதற்றங்கள், இந்தியப் பொருளாதாரத்தில் முன்னெப்போதும் இல்லாத ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள போதிலும், இந்திய எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் போன்றவை, மக்களின் நலன் கருதி கடந்த இரண்டு மாதங்களாகப் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் நஷ்டத்தை ஏற்றுக்கொண்டு வருகின்றன.

ஆனால், இந்த நிலை நீண்ட காலத்திற்கு நீடிக்காது என்பதால், பிரதமர் நரேந்திர மோடி எரிபொருள் சிக்கனம் குறித்துப் பல அதிரடியான வேண்டுகோள்களை நாட்டு மக்களுக்கு விடுத்துள்ளார். இந்தியாவில் ஒரு ‘எனர்ஜி லாக்-டவுன்’ (Energy Lockdown) வரப்போவதற்கான முன்னோட்டமாகவே பிரதமரின் இந்த அறிவிப்புகள் பார்க்கப்படுகின்றன.

பெட்ரோல் செலவைக் குறைக்க மக்கள் அரசு பேருந்துகள், மெட்ரோ மற்றும் ரயில்களை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், முடிந்தவரை வீடுகளில் இருந்தே வேலை செய்ய வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பைப் பாதுகாப்பதற்காக அடுத்த ஓராண்டு காலத்திற்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் ஆகிய இரண்டையுமே டாலர் கொடுத்துத்தான் இறக்குமதி செய்கிறது. கையில் இருக்கும் டாலரை தங்கம் வாங்கச் செலவு செய்துவிட்டால், அத்தியாவசியத் தேவையான கச்சா எண்ணெய் வாங்க டாலர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதே இதன் பின்னணியில் இருக்கும் பொருளாதாரக் கவலையாகும்.

பிரதமரின் இந்த வேண்டுகோளுக்குப் பிறகு, மக்கள் தங்கம் வாங்குவதைக் குறைப்பதற்காக மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை உயர்த்தப் போவதாக ஒரு தகவல் காட்டுத்தீயாகப் பரவியது. தற்போது 6 சதவீதமாக இருக்கும் இறக்குமதி வரி உயர்ந்தால், ஏற்கனவே ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டி விற்பனையாகும் நிலையில், அதன் விலை இன்னும் தாறுமாறாக உயரும் என்று நடுத்தர மக்கள் அஞ்சினர்.

தங்கம் விற்பனை செய்யும் நிறுவனங்களும் இந்த வரி உயர்வைச் சாக்காக வைத்து விலையை இன்னும் ஏற்றக்கூடும் என்ற அச்சம் நிலவியது. இந்தச் சூழலில்தான், கோடிக்கணக்கான சாமானிய மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு அதிரடி விளக்கத்தை அளித்துள்ளது. மத்திய அரசு அதிகாரிகள் அளித்துள்ள தகவலின்படி, தற்போதைக்குத் தங்கம் அல்லது வெள்ளி மீதான இறக்குமதி வரியை உயர்த்தும் எந்த ஒரு திட்டமும் அரசிடம் பரிசீலனையில் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

வரி உயர்வு இருக்காது என்பதால் தற்போதைக்குத் தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு, தங்கம் வாங்குவதைத் தள்ளிப்போடுங்கள் என்ற பிரதமரின் வேண்டுகோளையும் மக்கள் பரிசீலிக்க வேண்டும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

Related News

Latest News