Thursday, December 25, 2025

கணவனை கழிவறையில் புதைத்த மனைவி., புதுக்கோட்டையில் பகீர்

புதுக்கோட்டை மாவட்டம் மல்லாங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் பழனிவேலு – மகாலட்சுமி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். உடல்நலக்குறைவு காரணமாக பழனிவேலு, பல நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பழனிவேலு காணாமல் போனதாக கூறப்படுகிறது. அவரது சகோதரி காவிரியிடம் கோயம்புத்தூரில் சிகிச்சை எடுப்பதாக மகாலட்சுமி கூறியிருந்தார். மகாலட்சுமி வழங்கிய தகவல்களில் முரண்பாடுகள் ஏற்பட்டதால் காவிரிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக, பழனிவேலுவை தொடர்பு கொள்ள முடியாததால் அதிர்ச்சியடைந்த காவிரி, நமணசமுத்திரம் காவல்நிலையத்தில் தனது அண்ணன் காணாமல் போனதாக புகார் அளித்தார். காவலர்கள் இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தினார்கள்.

போலீசார் சந்தேகத்தின் பேரில் மனைவி மகாலட்சுமியை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் மகாலட்சுமி தனது கணவனை கொலை செய்து விட்டு, மகள்களுடன் சேர்ந்து உடலை புதைத்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், “ பழனிவேலுக்கும் – மகாலட்சுமிக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பழனிவேலு தனது மனைவியை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மகாலட்சுமி தனது கணவரை தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் பழனிவேலும் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டின் அருகே இருந்த கழிவறையில் குழித்தோண்டி புதைத்தாக போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related News

Latest News