சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை சந்தித்த செங்கோட்டையனை அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செங்கோட்டையனை நீக்கியது தான் எடுத்த முடிவு அல்ல என்றும், மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு எனவும் தெரிவித்தார். அதிமுகவுக்கு விசுவாசமாக இல்லாதவர் செங்கோட்டையன் என்றும், அதிமுகவுக்கு எதிராக பேசினால் தலைமை வேடிக்கை பார்க்காது எனவும் அவர் கூறினார்.
கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால், அதிமுகவில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் டிடிவி தினகரன் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். 10 ஆண்டுகாலம் வனவாசம் சென்றவர் தன்னை பற்றி கேள்வி எழுப்புவதா என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட டிடிவி தினகரனுக்கு அதிமுக குறித்து பேச எந்த அருகதையும் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திமுகவை ஆட்சியில் அமர்த்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விரும்புகின்றனர் என்றும், திமுகவுக்கு பீ-டீமாக செயல்படுவதுதான் அவர்களின் விருப்பம் எனவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். அதிமுகவை பலவீனப்படுத்த யார் முனைந்தாலும், தலைமை வேடிக்கை பார்க்காது என்றும் அவர் கூறினார்.
குற்றவாளியாக சசிகலா அறிவிக்கப்பட்டதும் தமிழ்நாடு தப்பியது என்று கூறியவர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், கட்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் உண்மையாக இல்லை எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
