கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் மகேந்திர சிங் தோனி, விராட் கோலி ஆகியோருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஸ்டார் வீரர்களான இவர்கள் அனைவரும் விமான நிலையத்துக்குச் செல்லும் போது பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது
எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும் தோனி, விராட் கோலி போன்றோர் விமான நிலையத்திற்குச் செல்லும்போது ஒரு சாதாரண பயணியைப் போல அதிகாரிகளால் பரிசோதனை செய்யப்படுவர். ஆனால், சச்சின் டெண்டுல்கர் மட்டும் விமான நிலையத்திற்குச் செல்லும்போது, அவர் எந்தவிதமான பாதுகாப்புச் சோதனையும் செய்யப்பட மாட்டார். மேலும் விமான நிலையத்தில் தோனியை விட சச்சினுக்கு ஏன் அதிக வசதிகள் கிடைக்கின்றன?. இந்த வேறுபாட்டிற்குக் என்ன காரணம்?
விமான நிலையத்தில் தோனி, விராட் கோலிக்கு கிடைக்காத இந்தச் சிறப்புரிமை சச்சின் டெண்டுல்கருக்கு மட்டும் கிடைத்ததற்கான முக்கிய காரணம், அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருது ஆகும் . 2014-ஆம் ஆண்டில், நாட்டின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா விருது சச்சினுக்கு வழங்கப்பட்டது.
இந்திய அரசின் விதிகளின்படி, பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்புச் சோதனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்தச் சலுகை அவர்களின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். விருது பெற்றவர்களுக்கு மட்டுமல்ல, இது அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கும் பொருந்தும்.
விமான நிலையப் பாதுகாப்புச் சோதனைகளைத் தவிர, பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அதாவது, ஏர் இந்தியா மற்றும் இந்திய ரயில்வேயில் முதல் வகுப்பு அல்லது எக்ஸிக்யூட்டிவ் வகுப்பில் இலவசமாகப் பயணிக்கலாம். அதேபோல், விருது பெற்றவர்கள் எந்த மாநிலத்திற்குச் சென்றாலும், மத்திய அமைச்சரவை அமைச்சர்களுக்கு இணையான அந்தஸ்தைப் பெற முடியும்.
