பெருந்தலைவர் காமராஜர் குறித்து திருச்சி எம்.பி சிவா பேசியது தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது. இது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதாவது : காமராஜர் ஆட்சி வேண்டுமென்று பேசும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வரத் தயாரா? குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்ற தனித்துப்போட்டியிடத் தயாரா?. தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என விமர்சித்தவர் காமராஜர் என கூறினார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது :
காமராஜர் விவகாரம் முடிந்து போன விசயம். நேற்றே முற்றுப்புள்ளி வைச்சாச்சு. ஆடு நனைகிறது என்று ஓநாய் கண்ணீர் விடுமாம். அதேபோல் எங்களை பற்றி அண்ணாமலைக்கு எவ்வளவு பெரிய கவலை.
பெருந்தலைவர் காமராஜரை கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் யார்?. அவருடைய மூதாதையர்கள், அவர் (அண்ணாமலை) ஏற்றுக்கொண்டிருக்கிற கொள்ளைவாதிகள் டெல்லியில் பெருந்தலைவர் காமராஜரை வீட்டோடு வைத்து எரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்கள். செய்து விட்டு வாக்குகளுக்காக அவருக்கு பிறந்த நாள் விழா எடுப்பது, இறந்த தினம் அனுசரிப்பது என்ற வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ். கோஷத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு செல்வப்பெருந்தகை பதில் அளித்தார்.